கிழக்கில் இருந்து தலைவர் ஹக்கீமை ஓரம்கட்டி அவர் கல்முனை மண்ணை தமிழ் கூட்டமைப்பிடம் தாரைவார்த்துவிட்டார் என்று பிழையாக காட்டி சிலர் தங்களது சொந்த அரசியலை செய்ய எடுத்த அத்தனை நாடகங்களும் தலைவரினதும் உயர்பீட உறுப்பினர்களினதும் கூட்டான முடிவால் தவிடுபொடியாகியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ சி யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி நிறைந்த சூழலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னுடைய உயர்பீட கூட்டத்தை நேற்று கூடியது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்வுயர்ப்பீட கூட்டம் காலை 10 மணியில் இருந்து மாலை 03.30 வரை மிக காரசாரமான வாத பிரதிவாதங்களுடனும் நடைபெற்றுள்ளது. அங்கு இடம்பெற்ற கருத்தாடல் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.
நேற்றைய கூட்டத்தில் கல்முனை உப பிரதேச செயலக விவகாரமே பிரதானமாக பேசப்பட்டது அத்துடன் ஏக காலத்தில் சாய்ந்தமருது மக்களது பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவேண்டும் என நான் கோரிக்கை விடுத்தேன். அத்தோடு தலைவர் இது தொடர்பில் யார் யாரையெல்லாம் சந்திக்கிறார் இதனை அடைந்துகொள்ள எவ்வாறான சவால்களை எதிர்கொள்கிறார் என்பதை நாம் அறிந்துள்ளோம் இதனை கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இங்கு பேசும்போது உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் ஊடகங்களில் அவை பற்றி ஒருபோதும் பேசுவதாக இல்லை உண்மைகளை மறைத்து தங்களது சொந்த அரசியல் செயல்பாடுகளையே செய்வதிலே முனைப்பு காட்டுகின்றனர். அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும் எனவும் நான் கோரினேன்.
அமைச்சர் பதவி தொடர்பில் இந்த உயர் பீட கூட்டத்தில் ஒருசிலர் பேசினார்கள் ஆனால் அதற்கு அந்தளவு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. ஆனால் அமைச்சுப்பதவி எடுப்பதா இல்லையா என்ற முடிவுக்காக மாத்திரமே உயர்பீடம் கூடியதாக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. ஆனால் எல்லோருடைய பேச்சினையும் அவதானித்து தனது முடிவை தலைவர் பக்குமாக அறிவித்தார்.
கல்முனை விவகாரம் தொடர்பில் எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்ய முடியாது. மிக குறுகிய காலத்தினுள் நிறைவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். பிரதமர் ரணில் எமக்களித்த வாக்குறுதியை மீறியுள்ளார், எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன் சரியான தீர்வுக்கு வராவிடில் நாம் எதிர்க்கட்சியில் அமர்வோம் என்றதும் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் ஒருமித்த குரலில் அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் முழக்கத்துடன் அங்கீகரித்தனர் அத்தோடு கூட்டம் நிறைவுக்கு வந்தது. இதனை விட வெளியிலே ஊடகங்கள் பேசுவது போல் அமைச்சு பதவி பற்றி எதுவும் இடம்பெறவில்லை என்றும் யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.
Post a Comment