Top News

மங்களவை ஜனாதிபதி வேட்பாளாராக்க முடியுமா? : வை எல் எஸ் ஹமீட்

வை எல் எஸ் ஹமீட்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மங்கள சமரவீரவை களமிறக்குவதன் சாத்தியப்பாடு தொடர்பாக முஸ்லிம்கள் கட்சிகள் ஐ தே கட்சியுடன் பேசவேண்டும்.

இந்நாட்டில் 30% சிறுபான்மையினர் இருக்கின்றனர். ஆகக்குறைந்தது 25% வாக்குகளை இலக்கு வைக்கலாம். ஐ தே கட்சியின் அடிப்படை சிங்கள வாக்குகளும் சுமார் 25% இருக்கின்றன.இன்று இனவாதத்திற்கப்பாற்பட்ட ஒருவராக அவர் மாத்திரமே தென்படுகிறார்.

மறுபுறம் மைத்திரியும் களமிறங்கினால் எதிரணி வாக்குப் பிரியும். அச்சூழலில் 50% இற்கு குறைவான வாக்குகளாலேயே வெற்றிபெறும் வாய்ப்பும் இருக்கின்றது.

முஸ்லிம் கட்சிகளிடம் “வருமுன் காப்போம்” என்ற பார்வையும் செயற்பாடும் இல்லாததால் பல பாதிப்புகளை நாம் சந்தித்திருக்கின்றோம்; சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயம் ஒரு சிறந்த உதாரணம். இந்த அரசாங்கத்திடம் தேர்தலின்போது இந்த சட்டவிரோத தமிழ் செயலகம் மூடப்படவேண்டும்; என்று ஒரு தேர்தல் ஒப்பந்தத்தை ஏனைய விடயங்களுடன் சேர்த்து செய்திருக்கலாம். அல்லது இவ்வரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்பாவது அக்கோசத்தை முன்வைத்திருக்கலாம். அவ்வாறு கோசம் முன்வைத்திருந்தால் அது மூடப்படாவிட்டாலும் அவர்களது அநியாய எல்லைகளைக்கொண்ட தரமுயர்த்தல் கோரிக்கையை நீர்த்துப்போக வைத்திருக்கலாம்.

இன்று அவர்கள் முஸ்லிம்களை கொண்டை கட்டியவர்கள் என நினைத்தோ தெரியவில்லை; முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப்போட்டு “சாத்தியமான தீர்வு” என்று அறிக்கை விடுகிறார்கள்.

நமது பக்கம் நூறுவீத நியாயம் இருந்தும் எதுவித நியாயமுமற்ற அவர்களது அநியாயமான கோரிக்கையை நியாயமானது; என தேசியமட்டத்திலேயே நம்பவைக்கும் அளவுக்கு அவர்களது பிரச்சாரம் அமைந்திருக்கின்றது.

நாம் மொட்டையாக, எல்லைப் பிரச்சினை, எல்லைப் பிரச்சினை; எல்லை மீள்நிர்ணயம் என்று சொல்லிக்கொண்டிருந்தோமே தவிர அவற்றிற்குரிய நியாயங்களை பாராளுமன்றிலோ, வேறு தளங்களிலோ பேசவில்லை.

சில தினங்களுக்கு முன் திரு சுமந்திரன் அதிர்வில் பேசும்போது கல்முனைப் பாராளுமன்ற உறுப்பினர் தமிழரின் கோரிக்கை நியாயமானது; என தன்னிடம் ஏற்றுக்கொண்டதாக கூறினார். நியாயமானது என்றால் எதற்காக போராட்டம்? மொத்தக் கல்முனையையும் தாரைவார்க்க வேண்டியதுதானே! அல்லது சுமந்திரனின் கூற்று உண்மையில்லையெனில் அதனை மறுக்கலாமே!

நாங்கள் பேசவேண்டிய இடத்தில் பேசவேண்டியதை பேசமல் ஏதாவது நடந்தபின் ஓடித்திரிவதை வழக்கமாக்கியிருக்கின்றோம்.

எனவே, இந்த ஜனாதிபதி வேட்பாளர் விடயத்திலாவது முன்கூட்டியே ஏதாவது செய்யலாமா? என்பது தொடர்பாக முஸ்லிம் கட்சிகள் சிந்திக்க வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post