இலங்கைக்கு எதிராக செயற்பட்டுவருகின்ற புலம்பெயர் சமூகத்தினரது நோக்கங்களையே நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நிறைவேற்றி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், புலம்பெயர் சமூகத்துடன் ரத்தன தேரர் இரகசிய தொடர்புகளை வைத்திருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
முஸ்லீம் அரசியல் தலைவர்கள் மற்றும் மருத்துவர் ஷாஃபி ஆகியோருக்க எதிரான குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அத்துரலியே ரத்தன தேரர் நேரடியாக விஜயம் செய்துவருகின்றார்.
இதன்புாது தமிழ் சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடிவரும் அவர், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுக்கு தமிழ் சமூகத்தை இணைத்துக்கொள்கின்ற முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
“குருநாகலை மருத்துவர் ஷாபியின் விவகாரத்திற்குப் பின்னர் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, அத்துரலியே ரத்தன தேரர் உள்ளிட்டவர்கள் சிசேரியன் சத்திரசிகிச்சை நிபுணர்களாகிவிட்டனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த விசாரணையின் அறிக்கை அண்மையில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மீது நம்பிக்கை இல்லை என்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்வதாகவும் ரத்தன தேரர் அறிவித்து வருகின்றார்.
இதுபோன்று புலம்பெயர் சமூகத்தினர் முன்வைத்துவரும் குற்றச்சாட்டுக்களான போர் காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள், போர் குற்றங்கள் உட்பட எந்தவொரு குற்றங்களுக்காகவும் இலங்கையை சேர்ந்த எவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல முடியாத நிலமைகயை 2002ம் ஆண்டிலேயே அப்போதைய பிரதமராக இருந்தபோது ரணில் விக்ரமசிங்க ரோம் பிரகடனத்திற்கு கைச்சாத்திடாததன் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.
ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அன்றி சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை அழைத்துச் செல்லமுடியாது. இவை எதனையும் அறியாமல் ரத்தன தேரர் கருத்து வெளியிடுகின்றார்” என கூறியுள்ளார்.
Post a Comment