உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கண்டறிய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் பரிந்துரைக்கு அமையப் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூவர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் 11 பேரைக் கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜெயமண்ணா மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே இளங்ககோன் ஆகிய மூவர் அடங்கிய குழு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய 13 பேரின் பெயர்களைப் பரிந்துரை செய்துள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குறித்த பரிந்துரைக்கு அமையவே கைது செய்யப்பட்டனர்.
மூவரடங்கிய குழுவின் பரிந்துரைக்கு அமைய, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆனந்த முனசிங்க, கொழும்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக, வடமேற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு மற்றும் நீர்கொழும்பு இற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், உதவி பொலிஸ் அதிகாரிகள் கட்டான மற்றும் ஜெம்பட்ட வீதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மெண்டிஸ் ஆகியோர் கைது செய்யப்படவுள்ள பட்டியலில் அடங்குகின்றனர்.
Post a Comment