அவசரகால சட்டம் நீக்கப்பட்டு விட்டாலும் அச்சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் பெண்களின் ஆடையான நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையும் நீக்கப்பட்டு விட்டதா? என்பது தெளிவற்ற நிலையில் உள்ளதால் முஸ்லிம் பெண்கள் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கும்வரை விழிப்புணர்வுடன் செயற்படுமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
“அவசரகால சட்டம் நீக்கப்பட்டதன் பின்பு சிலர் நிகாப் மற்றும் புர்கா தடையும் நீங்கிவிட்டதாக பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்களது பிரசாரங்களின்படி செயற்படுவதை விடுத்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைகளுக்கு அமைவாகவே முஸ்லிம் பெண்கள் செயற்பட வேண்டும்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் கிடைக்கும் வரை முகத்திரை அணியும் முஸ்லிம் பெண்கள் அவசரகால சட்டம் அமுலில் இருந்தபோது பொறுமையாகவும் நிதானமாகவும் எவ்வாறு கவனமாக நடந்து கொண்டார்களோ அவ்வாறு தொடர்ந்தும் நடந்து கொள்வது தற்போதுள்ள சூழலில் பாதுகாப்பானது என்று முஸ்லிம் கவுன்ஸில் கருதுகிறது.
இது விடயத்தில் நாட்டின் சூழலைக் கருத்திற்கொண்டு மிகவும் சாணக்கியமாக முஸ்லிம் சமூகத்தை வழி நடத்துமாறு முஸ்லிம் சமயத் தலைமைகளிடம் முஸ்லிம் கவுன்ஸில் வேண்டுகோள் விடுக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment