Top News

சிங்களவர்களுக்கு சுதந்திரமில்லை: 16ஆம் திகதி முற்றுப்புள்ளி வைப்போம் : விமல்



இலங்கையில் 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டு வந்து சுதந்திரம் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும், பௌத்த பிக்கு ஒருவரது உடலை தகனம் செய்வதற்கான சுதந்திரம் சிங்கள மக்களிடமிருந்து பறிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தலைகீழாக மாறிப்போயுள்ள நாட்டின் தலைவிதியை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது இப்படியான பரிணாமங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மக்கள் தயாராக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு நாயாறு, குருகந்த ரஜமஹா விகாரை விகாராதிபதியின் உடலை நீராவியடி ஆலய வளாகத்தில் தகனம் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதனையும் மீறி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான கடும் போக்குவாத பிக்குகள் தேரரின் உடலை தகனம் செய்ததினால் பாரிய சர்ச்சை ஏற்பட்டது.

இந்த செயற்பாட்டிற்கு சட்டவடிக்கை எடுக்கும்படி முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் பலரும் பணிப் பகிஷ்கரிப்பை நடத்தியுள்ளனர். எனினும் ஞானசார தேரர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழ் மக்கள் சிங்கள மக்களின் கோபத்தை தூண்டும் வகையில் நடக்கக் கூடாது என்ற கடுமையான எச்சரிக்கையை மல்வத்துப்பீடம் நேற்று விடுத்திருந்தது.

இந்த நிலையில், கேகாலை மாவநெல்ல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நீராவியடி விவகாரம் உட்பட கடந்த கால சம்பவங்களைப் போன்ற பரிணாமங்கள் மேலும் விருத்தியடைவதற்கு முன்னர் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

இந்த விடயம் தொடர்பில் விமல்வீரவன்ச தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

போரை வென்று நாட்டைக் காப்பாற்றிக் கொண்டு 10 வருடங்களாகின்றன. ஆனாலும் இப்போது பௌத்த பிக்கு ஒருவரது உடலை தகனம் செய்வதற்கும் இடமில்லை. இன்று இது தான் எமக்கு கிடைத்த சுதந்திரம். வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தின் போதும் விகாரை நிர்மாணிப்பதற்கு அனுமதி கோரப்படவில்லை. எனினும் அந்நிய மதவழிபாட்டுத் தலங்களை அமைக்கும் போது அனுமதி கோரப்பட வேண்டும். ஏன்? இந்த நாட்டின் வரலாற்று மதத்திற்கு வெள்ளையர்கள் அனுமதியளித்தனர்.

இந்த நிலையிலேயே இன்று பௌத்த விகாரையின் பிக்கு ஒருவரது உடலை விகாரையில் தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதிக்கின்றது. இந்த நாடே முழுமையாக தலைகீழாக கவிழ்ந்துவிட்டது. இப்படியான பரிணாமங்கள் வளர்ச்சியடைவதை நிறுத்துவதற்கான தீர்மானத்தை நவம்பர் மாதம் 16ஆம் திகதி எடுக்க வேண்டும். இந்த நாட்டை சங்கடத்திற்கு தள்ளவோ, அமெரிக்காவிற்கு ஒப்படைக்கவோ அல்ல.

இந்த நாடு பாதுகாப்பை கோருகின்றது. பொருளாதார உறுதியைக் கோருகின்றது. இறைமையை விட்டுக் கொடுக்காத தலைவரை கோருகிறது எனத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாஸ தனக்கு எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்றும், நிபந்தனைகளுக்கு ஒருபோதும் தாம் அடிமையாகப் போவதும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு அதிகாரப் பரவல் உட்பட பல்வேறு நிபந்தனைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போது அமைச்சர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,

அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு பிரதமர் ரணில் விதித்த நிபந்தனைகளை பட்டியலிட்டார். தற்போது அமைச்சர் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நியமித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருக்கு நிபந்தனைகளை விதித்திருக்கின்றார். என்ன நிபந்தனை?

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும், கட்சித் தலைமைத்துவத்தில் மாற்றமில்லை, 06 மாதங்களிற்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டும், சமஸ்டி முறையிலான தீர்வு ஆகியன முக்கிய நிபந்தனைகளாகவும் இன்னும் பல துணை நிபந்தனைகளையும் வித்திருக்கின்றார் பிரதமர் ரணில்.

வேட்பாளர் சஜித்தை இரண்டாவது சிறிசேனவாகவே ரணில் பார்க்கின்றார். இந்த நிபந்தனைகளை சஜித் நிராகரிக்க, அவரது மனைவி ரணிலை சந்தித்து பேச்சு நடத்தியிருப்பதாக தகவல். இந்த நெருக்கடியானது வேறு பிரச்சினையில்லை. ரணிலை விட மேற்குலக நாடுகளுக்கு வேறு தெரிவில்லை எனவும் ஊடகங்கள் மத்தியில் விமல் வீரவன்ஸ கருத்துத் தெரிவித்தார்.

ibct

Post a Comment

Previous Post Next Post