ஜனாதிபதி தேர்தல் மற்றும் அடுத்த பாராளுமன்றத் தேர்தல்களில் தீர்மானிக்கும் சக்தியாக நாமே இருப்போம். எமது ஆதரவில்லாது முடிந்தால் 47 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்காட்டுமாறு ஏனைய கட்சிகளுக்கு சவால்விடுகின்றோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத் தேர்தலில் 30 ஆசனங்கள்வரை சு.கவே கைப்பற்றும். அதன் அடிப்படையில்தான் 2020இல் எமது அரசாங்கம் அமையுமென ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில்,
சு.கவின் 68ஆவது மாநாடு வெற்றிகரமாக நடந்துமுடிந்துள்ளது. எமது கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளோம். நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் தெளிவான வேலைத்திட்டத்தை அதில் முன்வைத்துள்ளோம். எமக்கு தனிநபர்கள் முக்கியமல்ல. நாட்டை வெற்றிக்கொள்ளும் வேலைத்திட்டமே முக்கியம். நிலைபேண்தகு அபிவிருத்தி, வீடமைப்பு, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து உட்பட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் தெளிவான கொள்கைக் பிரடனகத்தை வெளியிட்டுள்ளோம். இவற்றை தான் தேர்தலில் மக்களிடம் கொண்டுசேர்க்கவுள்ளோம்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் நாம் தான் தீர்மானிக்கும் சக்தி. எந்தவொரு கட்சியாலும் 47 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. அப்படி எவரும் 47 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியுமென்றால் பெற்றுக்காட்டுமாறு சவால் விடுகின்றோம்.
பொதுஜன பெரமுனவுடன் பேச்சுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்தகட்ட நகர்வுகள் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகளின் அடிப்படையில் இடம்பெறும் என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
Post a Comment