ஜனாதிபதி தேர்தலில் வெறுமனே ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளை கொண்டு வெற்றிபெற முடியாது. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் முக்கியமானதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியினதும், ஐக்கிய தேசிய முன்னணி பங்காளிக் கட்சிகளினதும் ஆதரவைப் பெற்றால் போதாது, ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள வேண்டுமாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் சிவில் அமைப்புகளினதும் ஆதரவைப் பெற்றாக வேண்டும். மேலும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்குதல் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கல் என்ற வாக்குறுதிகளை மீறமுடியாது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் கட்சியின் தலைவர் மற்றும் பிரதித் தலைவர் இருவருக்கும் இடையில் நிலவும் இணக்கப்பாடற்ற நிலைமைகள் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித்பிரேமதாசவிற்கும் இடையில் ஏற்கனவே சந்திப்பொன்று இடம்பெற்ற நிலையில் சஜித்திடம் தாம் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டுமென்றால் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் ரணில் விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் மூலமாக சஜித் தனக்கான பங்காளிக்கட்சிகளின் ஆதரவை பெற்றுக் கொண்டதுடன் ஐக்கிய தேசிய முன்னணியின் பெரும்பான்மை பலத்தையும் தன்வசப்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில் மீண்டும் பிரதமருடன் அமைச்சர் சஜித் தனித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்ற தீர்மானம் எடுக்கப்பட்டதன் விளைவாக நேற்று காலையில் இருவரும் தனித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்ற நிலையில் நேற்றும் பிரதமர் மேலும் சில சவால்களை அமைச்சர் சஜித்திடம் முன்வைத்துள்ளார். ஆரம்பத்தில் தனக்கான பலத்தை பற்றிக் கூறிய அமைச்சர் சஜித் பிரேமதாச தான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவையும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் ஆதரவையும் பெற்றுள்ளேன், மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளேன் என்ற காரணிகளை பிரதமரிடம் முன்வைத்துள்ளார். இதற்குப் பதிலளித்த பிரதமர், ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஐக்கிய தேசிய முன்னணியினதும் ஒத்துழைப்புகளை பெற்று போதாது கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கிய சிவில் அமைப்புகளின் ஆதரவையும் அதற்கும் அப்பால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பூரண ஒத்துழைப்பையும் பெற்றாக வேண்டும். இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு உங்களுக்கு ஆதரவு வழங்குவதாக கூறவில்லை. ஆகவே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவையும் பெற்றாக வேண்டும். ஆகவே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ளும் நடவடிக்கையை கையாளுமாறு பிரதமர் பணித்துள்ளார். அதற்கு இணக்கம் தெரிவித்த அமைச்சர் சஜித் விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி ஒரு தீர்மனத்தை எடுப்பதாகவும் சிவில் அமைப்புகள் மற்றும் ஏனைய கட்சிகளை சந்தித்து பேசுவதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல் 19 ஆம் திருத்தத்தை கையாள்வது குறித்தும் 20 ஆம் திருத்தம் முழுமைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் குறித்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் சஜித்திடம் கூறியுள்ளார். கடந்த அமைச்சரவை கூட்டத்தில் நடந்த விடயங்கள் அமைச்சரவையை கூட்ட ஜனாதிபதி முன்வைத்த காரணிகள் என்ற பல விடயங்களை கூறியுள்ளார். குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதான வாக்குறுதிகளை வழங்கியுள்ள நிலையில் அதனை மீற முடியாது. 19 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது அதில் சகல காரணிகளையும் நிறைவேற்ற முடியாது போயுள்ளது.
புதிய அரசியலமைப்பு விடயங்களை கைவிட வேண்டிய நிலைமையில் இன்று தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் இவற்றை நம்பி எம்மை ஆதரித்த கட்சிகளுக்கு இன்று எம்மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. அதேபோல் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாகக் கூறிய நிலையில் இன்று உங்களின் கருத்துக்கள் எமது வாக்குறுதிகளுக்கு மாறானதாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த அமைச்சர் சஜித் இந்த நகர்வுகளை தான் இப்போது செய்ய வேண்டாம் என கூறியதாக பிரதமரிடம் கூறியுள்ளார்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளை மாத்திரம் வைத்துக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் வெறுமனே ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளை கொண்டு வெற்றி பெற முடியாது. ஆகவே தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் முக்கியமானது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு அப்பாற்பட்ட மக்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை கையாளுங்கள் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் சஜித்திடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் இருவருக்கும் இடையில் பல தரப்பட்ட கருத்துக்கள் பகிரப்பட்ட போதிலும் நேற்றும் இறுதித் தீர்மானம் எதுவும் இல்லாமலே முடிவுக்கு வந்துள்ளது. எனினும் இன்று திங்கட்கிழமை பிற்பகலில் மீண்டும் இருவரும் சந்தித்துக் கலந்துரையாடத் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய இன்று பிற்பகலில் மீண்டும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
Post a Comment