சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தால், அவருக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் ஊடகங்களுக்குத் தெரிவித்தமை குறித்து, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஒருவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் விசனம் வெளியிட்டுள்ளார்.
“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்களுடன் கட்சி சார்பாக பேசி, எமது கோரிக்கைகளை முன்வைத்து, அவற்றினை நிறைவேற்றுவதற்குத் தயாராக உள்ள வேட்பாளருக்கு ஆதரவளிப்பதென, உயர் பீடத்தின் அங்கிகாரத்தையும் பெற்ற பின்னரே, யாருக்கு ஆதரவு என்பது பற்றி தலைவர் அறிவித்திருக்க வேண்டும்.
ஆனால், இவை எதுவும் நடைபெறாமல், தமது விருப்பத்தின் படி, தான்தோன்றித்தனமாக சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தலைவர் ஹக்கீம் கூறியுள்ளமையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும், மு.காங்கிரஸின் அந்த பிரதித் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம் காங்கிரஸில் யாருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுப்பது, யாருக்கு அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொடுப்பது, எந்தக் கட்சி ஆட்சியமைக்க ஆதரவளிப்பது, எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில், கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கட்சியின் உயர்பீடத்தினது தீர்மானங்களைப் பெறாமமலேயே, தனித்து தீர்மானங்களை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment