எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்குவதற்கு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிபந்தனைகளை விதித்துள்ளார்.
அலரி மாளிகையில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நேற்று மாலை நடைபெற்ற சந்திப்பின்போதே நிபந்தனைகளுடன் சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
அதாவது பிரதமராகவும் கட்சியின் தலைவராகவும் தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்க நீடிக்கவேண்டும் , ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் ஆறு மாதங்கள் தொடக்கம் ஒருவருட காலப்பகுதிக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கவேண்டும் , ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படவேண்டும் ஆகிய நிபந்தனைகளுக்கு சஜித் பிரேமதாச இணக்கம் தெரிவித்தால் ஜனாதிபதி வேட்பாளராக அவரை களமிறக்கலாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவித்தன.
நேற்று மாலை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச தவிசாளர் கபிர் ஹஷிம் செயலாளர் அகில விராஜ் காரியவசம் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல ரவி கருணாநாயக்க மலிக் சமரவிக்ரம உட்பட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்கேற்ற சந்திப்பிலேயே இந்த இணக்கப்பாட்டினை பிரதமர் தெரிவித்துள்ளார். .
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு இந்த நிபந்தனைகளை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டால் அதற்கான நடவடிக்கை எடுப்பது என்றும் இவற்றை ஏற்றுக்கொள்ளாவிட்டால் கட்சியின் செயற்குழுவில் வாக்கெடுப்பினை நடத்தி வேட்பாளர் தெரிவு தொடர்பில் தீர்மானம் எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிபந்தனையுடன் வேட்பாளர் நியமனத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச அணியினர் நேற்று முடிவு எதனையும் தெரிவிக்கவில்லை. தமது ஆதரவாளர்களுடனும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடிய பின்னரே தமது முடிவினை அறிவிப்பதாக சஜித் அணியினர் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னர் இவ்விடயம் தொடர்பில் தமது முடிவினை சஜித் அணியினர் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விடயததில் இணக்கப்பாடு காணப்பட்டால் நாளைய தினம் செயற்குழுவை கூட்டி அதன் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இல்லையேல் செயற்குழுவில் வாக்கெடுப்பை நடத்தி வேட்பாளரை தெரிவு செ்யவேண்டிய நிலை ஏற்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களான கபிர் ஹஷீம் அகில விராஜ் காரிய வசம் நவீன் திசாநாயக்க ரவி கருணாநாயக்க ஆகியோர் நேற்று இரவு சந்தித்து இது தொடர்பில் மேலதிக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.
எட்டாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்கள் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
Post a Comment