ஆசிரியைகளாக நியமனம் பெற்று திருகோணமலை சண்முகா தேசிய பாடசாலைக்கு சென்றுள்ள மூன்று முஸ்லிம் ஆசிரியைகளுக்கு அபாயா அணிந்து செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இதன்போது நியமனம்பெற்ற மூன்று முஸ்லிம் ஆசிரியைகள் கடமைகளை பொறுப்பேற்க கடந்த 20 ஆம் திகதி குறித்த பாடசாலைக்கு அபாயா அணிந்து சென்றபோது, அதிபரால் அபாயா அணிந்துவர முடியாதெனக் கண்டிப்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களுக்கான நேரசூசியும் வழங்குவதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரி அணிந்து வந்தால் மாத்திரம் பாடவேளை நேரசூசி தரமுடியும். இல்லையேல், ஆசிரியர் ஓய்வறையில் இருந்துகொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து தகவல்கள் கிடைத்தன.
இது விடயமாக குறிப்பிட்ட மூன்று ஆசிரியைகளும் இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்கு சென்று தமது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை, முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி 5 முஸ்லிம் ஆசிரியைகள் குறித்த பாடசாலையில் சாரி அணிந்து வர வற்புறுத்தப்பட்டமையால் தற்காலிக இடமாற்றத்தை பெற்று சென்றனர். இவ்வாறு குறித்த பாடசாலையிலிருந்து பாதிப்புக்குள்ளான ஆசிரியைகளுக்கு எந்தவிதமான நிரந்தரமான தீர்வொன்றும் கொடுக்கப்படாத நிலையில் தற்போது மீண்டும் பிரச்சினையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து முஸ்லிம் பெண்களின் கலாசார ஆடையை மறுத்து வருகின்ற நிலையில் அரசாங்கத்தினால் நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, ஆசிரியைகள் அபாயா அணிந்து செல்வதில் சிக்கல் இல்லையெனக் கல்வியமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில் குறிப்பிட்ட திருகோணமலை சண்முகா தேசிய பாடசாலை அதிபரும் அதன் நிர்வாகத்தினரும் அதற்கெதிராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்; விடிவெள்ளி
Post a Comment