அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள யாருக்கும் முடியாது. அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்கும் பிரேரணையை பிரதமரே அமைச்சரவைக்கு சமர்ப்பித்தாரென அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளதன் மூலம் அவர் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறியுள்ளார். அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்படவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஆசூ மாரசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றார். இதுதொடர்பில் குறிப்பிடுகையிலேயேஅவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கட்சியில் இருக்கும் யாருடைய தேவைக்காகவும் வேறு கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக விசாரணை நடத்த யாருக்கும் முடியாது. அதற்கு எதிராகவே நாங்கள் இருப்போம். அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறியுள்ளதாகத் தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணை நடத்தவேண்டுமென யாராவது தெரிவித்தால், அமைச்சரவையில் நாங்கள் பெரும்பான்மையானவர்கள் அதற்கு எதிராக இருப்போம்.
அத்துடன் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி எம்மிடமிருந்து பலாத்காரமாக அரசாங்கத்தை எடுத்துக்கொண்டபோது அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனைத்து விடயங்களையும் புறக்கணித்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர். அதேபோன்று ஏப்ரல் 21ஆம் திகதியும் பாரிய அர்ப்பணிப்பை செய்திருந்தார். கொள்கையை மதித்து அரசியல் செய்யும் தலைவராகவே நாங்கள் அவரை காண்கின்றோம்.
அத்துடன் ஆசூ மாரசிங்க தேசிய பட்டியலில் வந்தவர். 2015இல் தேசியப்பட்டியலில் வந்த பின்னரே அவரை நாங்கள் அறிவோம். அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக விசாரணை நடத்தவேண்டுமெனத் தெரிவிக்கும் அளவுக்கு கட்சியில் அவர் எந்த பதவியையும் வகிப்பதில்லை. அவ்வாறு தெரிவிப்பதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை.
மேலும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதற்கு இது பொருத்தமான நேரமல்ல. இந்த நேரத்தில் அதனை நீக்குவதற்கு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோகணேசன், சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணையை ஏன் முன்வைத்தார்கள் என்பதே எமது கேள்வியாகும் என்றார்.
Post a Comment