ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து வங்குரோத்து அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் சதியில் சிக்கிக்கொள்ள வேண்டாமென நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் அங்கவீன இராணுவ வீரர்களிடம் கேட்டுக்கொண்டார்.
தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் அனைத்து வேலை நிறுத்தங்களினதும் பின்னணியில் அரசியல் இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் இதனை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இராணுவ வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.
நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மேலும் கூறுகையில்,
ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்கள் போல் அல்லாது இராணுவ வீரர்களுக்கு அவர்களது முழுச் சம்பளமும் ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றன. அவர்களின் இறப்புக்குப் பின்னர் அதில் ஒரு சில கொடுப்பனவுகளைத் தவிர்ந்த ஏனைய ஓய்வூதியத்தொகை அவர்களுடைய மனைவிக்கு கையளிக்கப்படுவது உறுதி.
நாட்டுக்காக போராடிய இராணுவ வீரர்களை இன்று எதிர்க் கட்சியினர் வீதியில் இறக்கியுள்ளனர். அவர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் முன்னாள் அரசாங்கம் இராணுவ வீரர்களுக்காக எதனையும் செய்யவில்லை. 'அப்பிவெனுவென் அப்பி' எனும் நிதியத்தை இராணுவ வீரர்களுக்காக ஆரம்பித்து அதில் கோடிக்கணக்கான பணத்தை உள்வாங்கியபோதும் அப் பணத்துக்கு என்ன நிகழ்ந்தது என்று இதுவரை தெரியாமலுள்ளது என்றார்.
Post a Comment