Top News

வஹாபியிசம், அரபுமயமாக்க போக்குகளை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவுக்குழு பரிந்துரை செய்ய முடிவு..!


ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு, தமது விசாரணை அறிக்கையை இறுதி செய்வதற்கான கூட்டத்தை நேற்று நடத்தியது. இதில் ஐந்து பிரதான விடயங்கள் குறித்து பரிந்துரைகளை முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று -24- பிற்பகல் 2.15 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.

இதில் ராஜித சேனாரத்ன அஷூ மாரசிங்க, ரவூப் ஹக்கீம் ஆகியொர் தவிர ஏனைய உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


இந்தக் கூட்டத்தில், பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறைகளில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும், இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் பௌத்த அடிப்படைவாதத்தின் எழுச்சியை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும், பரிந்துரைகளை முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சீர்திருத்தம் உள்ளிட்ட சட்ட தாமதங்களை நிவர்த்தி செய்ய அழைப்பு விடுக்கும் வகையில், பரிந்துரைகளை முன்வைக்கவும், தெரிவுக்குழு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

வஹாபியிசம் மற்றும் அரபுமயமாக்க போக்குகளையும், அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெரிவுக்குழு பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது,
இடைவெளிகள், பலவீனங்கள் மற்றும் சீர்திருத்தம் தேவைப்படும் பகுதிகளை அடையாளம் கண்டு, மேலும் பலப்படுத்துவதற்கு, தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்து விரிவான மறுஆய்வை மேற்கொள்ளுமாறு பரிந்துரை செய்யவும், தெரிவுக்குழு இணங்கியுள்ளது.

பணிகள், பொறுப்புகள் மற்றும் சாத்தியமான மேலெழுதல்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறையின் தற்போதைய கட்டமைப்புகளை உடனடியாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் கோரப்படவுள்ளது.

புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளின் முக்கியத்துவத்தையும், அவற்றை வலுவாக மற்றும் சுயாதீனமானதாக மாற்றுவதன் அவசியத்தையும் தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கையின் முக்கியமாக சுட்டிக்காட்டப்படும் என்று தெரிவுக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த இலக்கை அடைவதற்கு, குறிப்பிட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியமாகும்.


தெரிவுக்குழு முன்பாக வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், தேசிய பாதுகாப்புச் சபையின் செயற்பாட்டு தன்மை மற்றும் முக்கிய சீர்திருத்தங்களின் அவசியத்தை சுட்டிக்காட்டுகின்றன என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

இந்த சீர்திருத்தங்கள் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்க வேண்டும்.

அதனைக் கையாளுவதற்கு, அனுபவமிக்க பணியாளர்களைக் கொண்ட ஒரு செயலகத்துடன், தேசிய பாதுகாப்புச் சபைக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும்.தேசிய பாதுகாப்புச் சபையின் ஆணையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

சீர்திருத்தம் செய்யப்பட்ட தேசிய பாதுகாப்புச் சபை, புலனாய்வு மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த நிபுணத்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும். முக்கிய முன்னேற்றங்கள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க கூடியதாக, இருக்க வேண்டும்.


பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு அடிப்படையில், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்க வேண்டும்


தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பெயரில் நிர்வாக பிரிவில், ஒரு புதிய பதவி நிலையை உருவாக்கவும், தெரிவுக்குழு அறிக்கை பரிந்துரைக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு நபராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இருக்க வேண்டும்.

அவர், தேசிய பாதுகாப்புச் சபை செயலகத்தின் பணிகளை மேற்பார்வையிடுவார்.
அதிபர் மற்றும் அரசாங்கத்துக்கு இணையாக பாதுகாப்பு விவகாரங்களை கையாளுவார்

பாதுகாப்புச் சபைக் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதும், பாதுகாப்பு அமைச்சரின் பின்தொடர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆணையும் அவருக்கு அளிக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சர், அதிபரைத் தவிர வேறொரு நபராக இருந்தால், அதிபர், பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அறிக்கை அளித்தால் அது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

Previous Post Next Post