Top News

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமிக்க பிரதமர் இணக்கம் ,மத்திய செயற்குழுவில் பிரேரணை சமர்ப்பிக்க முஸ்தீபு- கிரியெல்ல


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது இணக்கத்தை தெரிவித்ததாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுடன் நேற்றிரவு (24) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த இணக்கத்தை பிரதமர் வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில்,  கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசிம், உப தலைவர் அமைச்சர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார, அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சித் தலைமையிலிருந்தும் வெளியேறுவதற்கு விருப்பம் தெரிவித்ததாகவும், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அந்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் அமைச்சர் கிரியெல்ல கூறியுள்ளார்.
கட்சியின் தலைமையில் இருந்துகொண்டு கட்சியின் வெற்றிக்காக செயற்படுமாறு சிரேஸ்ட உறுப்பினர்கள் பிரதமர் ரணிலிடம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச வருவதற்கு தமது முழுமையான விருப்பத்தை தெரியப்படுத்தியதாகவும், இந்தப் பிரேரணை நாளை மறுதினம் (26) நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post