பொலிஸ் திணைக்களமானது சுயாதீன ஆணைக்குழுவின் கீழ் இயங்குவதாக கூறிக்கொண்டு அதிகார கட்டுப்பாடு இல்லாமல் வரையறையற்ற கைதுகளை மேற்கொள்கிறது. சில பிரதேசங்களில் காணப்படும் போதைவஸ்து வியாபாரத்தை கூட கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறார்கள். முஸ்லிங்களின் முக்கிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஹஜ்ஜுல் அக்பரின் கைதின் பின்னராக சகல விசாரணைகளும் முடிந்தும் அவரை விடுதலை செய்யாமல் இருப்பது மனித உரிமை மீறலாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக மூலோபாயங்கள் அமைச்சின் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தனது உரையில் மேலும், கடந்த உயிர்த்த தின பயங்கரவாத சம்பவங்களின் பின்னர் தொடர்ந்தும் பல கைதுகள் நடைபெற்ற போதிலும் அந்த சம்பவங்களில் தொடர்புபடாத பலர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் தொடர்ந்தும் பலர் கைது செய்யப்பட்டுவரும் இந்நிலையில் முஸ்லிங்களின் முக்கிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் (அமீர்) ஹஸ்ரத் ஹஜ்ஜுல் அக்பரும் கைதுசெய்யப்பட்டார். விசாரணைகளின் போது அவருக்கு குறித்த சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவந்தும் தொடர்ந்தும் பல நாட்களாக தடுத்து வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.
முக்கிய அறிஞர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஹஜ்ஜுல் அக்பரை தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பது ஏற்றுகொள்ள முடியாத ஒன்றாகும். இந்த செயலை முஸ்லிம் சமூகம் வன்மையாக கண்டிக்கிறது. சட்டமொழுங்குக்கு பொறுப்பாக இருக்கின்ற ஜனாதிபதி அவர்களும் பிரதமரும் இந்த அரசாங்கமும் உடனடியாக அவரை விடுதலை செய்ய முன்வரவேண்டும் என இந்த உயரிய சபையில் கேட்டுக்கொள்கிறேன்.
2015ஆம் ஆண்டு 19ஆம் திருத்த சட்டமூலம் கொண்டுவரப்பட்ட பிரதான நோக்கம் ஊழல்,மோசடி இல்லாத வினைத்திறன் மிக்க ஆட்சியை கொண்டுநடாத்துவதே.ஆனால் இப்போது லஞ்சம் ஊழல் மோசடி நிரம்பிவழிந்து அந்த நோக்கம் நிறைவேறாமலே ஆகியிருக்கிறது. பொலிஸ் திணைக்களமானது சுயாதீன ஆணைக்குழுவின் கீழ் இயங்குவதாக கூறிக்கொண்டு அதிகார கட்டுப்பாடு இல்லாமல் வரையறையற்ற கைதுகளை மேற்கொள்கிறது. சில பிரதேசங்களில் காணப்படும் போதைவஸ்து வியாபாரத்தை கூட கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறார்கள்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இருக்கும் முரண்பாட்டு உரசல்களால் நாடு சீரழிந்துகொண்டிருக்கிறது. 19ஆம் திருத்தச்சட்டமூலமும் இப்போது வலுவிழந்தது போன்று மாறிவிட்டது.மக்களுக்கு தேவையான சட்டங்களை பாராளுமன்றத்தில் இயற்றுவது மட்டுமின்றி அவற்றுக்கு பொறுப்புகூறுபவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மாற வேண்டும். சட்டம் இயற்றுவது மட்டுமல்ல அதிகாரமும் பெறப்படல் வேண்டும்.
விரைவில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்கள் கடுமையாக சிந்தித்து செயற்பட வேண்டும். முஸ்லிங்களின் நிறைய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது அதிலும் கிழக்கில் நிறைய பிரச்சினைகள் தேங்கி கிடப்பில் கிடக்கிறது. கல்முனை பிரதேச விவகாரம், வாழைச்சேனை, தோப்பூர் மக்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டியவை. முஸ்லிம் கட்சிகள் முந்தைய காலங்களில் செய்தது போன்று நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டை மாற்றி தமது ஆதரவை அறிவிக்க முன்னர் தமது சமூகம் சார்ந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி பேச்சுவார்த்தை செய்ய வேண்டும். அதுவே எமது மக்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமையாக உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமக்கு இருக்கும் இனப்பிரச்சினை அடங்கலாக சகல பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற முஸ்லிம் கட்சிகளுடன் பரஸ்பரமாக பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்- என்றார்.
Post a Comment