Top News

சஹ்ரான் குழுவினர் பயன்படுத்திய வெடிமருந்து - FBI வெளிப்படுத்தியுள்ள தகவல்..



ஈஸ்டர் ஞாயிறு தினம் சஹ்ரான் உட்பட அடிப்படைவாத குழுவினர் நடத்திய அனைத்து தற்கொலை குண்டு தாக்குதலுக்கும் பயன்படுத்திய குண்டுகளை தயாரிக்க யூரியா நைத்ரேட் வெடி மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சமஷ்டி விசாரணை பணியகம் (FBI) மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் என்பன வழங்கிய அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் 7 விசேட குழுக்களை பயன்படுத்தி நடத்திய ஆய்வில் ஏழு தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் யூரியா நைத்ரேட் வெடி மருந்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ. வெலியங்க தெரிவித்துள்ளார்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம், ஷெங்ரீலா ஹொட்டல், கிங்ஸ்பெரி ஹொட்டல், சினமன் கிரேன்ட் ஹொட்டல் மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் சஹ்ரான் குழுவினர் தற்கொலை குண்டு தாக்குதல்களை நடத்தினர்.

இவை சம்பந்தமான குற்றவியல் அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்பிப்பதாகவும் கொச்சிக்கடை தேவாலயத்தில் நடந்த தற்கொலை தாக்குதல் தொடர்பான அறிக்கை முதலில் வழங்கப்படும் எனவும் வெலியங்க குறிப்பிட்டுள்ளார்.

யூரியா நைத்ரேட்டுடன் வோட்டர் ஜெல், ஜெலக்னைட், டைனமைட் கைட்ரோ பேஸ் போன்றவற்றை குண்டின் சக்தியை அதிகரிக்க பயன்படுத்தியுள்ளனர். அதிகமான சேதத்தை ஏற்படுத்துவதே இதன்நோக்கம்.

அனைத்து குண்டுகளுக்கும் தலா ஆறு 9 வோட் மின் கலங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு குண்டுக்கு தலா 10 முதல் 13 கிலோ கிராம் வெடி மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது என வெடி மருந்துகள் சம்பந்தமான நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post