Top News

கடலில் திசை மாறி 20 நாள்கள் தத்தளித்த இலங்கை மீனவர்கள் - பசி தீர்த்த ஆமை ரத்தம்...!



இயந்திரம் பழுதடைந்த தமது படகில் இருந்தவாறு, கடலில் 20 நாட்களாக திசையறியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவர், தங்களுடன் பயணித்த சக மீனவரை இழந்த நிலையில், சுமார் 180 கடல் மைல் தூரத்தில் வைத்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த படகில் பயணித்த மூவரில் ஒருவர் இறந்து விட்டதாகவும், அவரின் சடலத்தை படகில் வைத்துக் கொண்டு, 8 நாட்கள் கடலில் தாங்கள் அலைக்கழிந்ததாகவும் காப்பற்றப்பட்டவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.எல். ஆரிஸ், மற்றும் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எம். ஜுனைதீன் ஆகிய மீனவர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்களுடன் பயணித்த காரைத்தீவைச் சேர்ந்த எஸ். ஸ்ரீ கிருஷ்ணன் எனும் 47 வயதுடைய மீனவர் கடலில் மரணமடைந்துள்ளார்.

ஆரிஸ், ஜுனைதீன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய மூவரும், கடந்த மாதம் 18 ஆம் திகதி, தமது ஊர்களுக்கு அருகிலுள்ள மாளிக்கைக்காடு எனும் இடத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக படகு ஒன்றில், பிற்பகல் 2.30 மணியளவில் கடலுக்குச் சென்றிருந்தனர்.

அது - ஒருநாள் பயணமாகும். மறுநாள் காலை - கரை திரும்புவது அவர்களின் திட்டம்.

அதனால், அந்தப் பயணத்துக்குரிய ஏற்பாடுகளெல்லாம் ஒரு நாளுக்குரியதாகவே இருந்துள்ளன.

அவ்வாறு பயணித்த படகு, 20 நாட்களாக கரை திரும்பவில்லை. அதில் பயணித்த மூவருக்கும் என்னவானது என்பது தெரியாமல் அவர்களுடைய குடும்பத்தினர் தவித்து வந்த நிலையில்தான், மேற்படி இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பயணத்தின் போது - என்ன நடந்தது என்பதையும், அவர்களுக்கு ஏற்பட்ட திகில் அனுபவங்களையும், காப்பாற்றப்பட்ட மீனவர்களில் ஒருவரான ஆரிஸ், பிபிசி யிடம் விவரித்தார்.

24 நாட்களுக்குப் பின்னர் வீடு திரும்பியிருந்த அவரை நாம் சந்தித்தபோது, பேசுவதற்கு கூட, தெம்பற்றிருந்தார்.

"நாங்கள் பயணித்த படகு 36 அடி நீளமுடையது. படகில் 30 லீட்டர் டீசல் இருந்தது. சாப்பிடுவதற்கு பணிஸ், வாழைப்பழம் வைத்திருந்தோம். வீட்டிலிருந்து இரவுச் சாப்பாட்டுக்கு சோறு கொண்டு வந்திருந்தோம். 5 லிட்டர் கலனில் குடிநீர் நிரப்பப்பட்டிருந்தது.

பிற்பகல் 2.30 மணிக்கு நாங்கள் புறப்பட்டோம். மாலை ஆறரை மணியளவில் மீன் பிடிக்கக் கூடிய இடத்தை அடைந்தோம். அப்போது படகின் இயந்திரம் குறைந்த வேகத்தில் இயங்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் இயந்திரத்தின் இயக்கம் நின்று போனது. நாங்கள் வலைகளை கடலில் விரிக்கத் தொடங்கினோம். இரவு 10 மணியளவில் சாப்பிட்டோம். அதன் பிறகு படகின் இயந்திரத்தை இயக்குவதற்கு முயற்சித்தோம். முடியவில்லை. எங்களில் எவருக்கும் படகின் இயந்திரத்தை திருத்தத் தெரியாது.

கடலில் வீசிய காற்றின் திசையில் எங்கள் படகு செல்லத் தொடங்கியது. எங்களிடம் கைபேசிகள் இருந்தன. ஆனால் கரையிலிருப்பவர்களைத் தொடர்பு கொள்வதற்கு ´சிக்னல்´ கிடைக்கவில்லை.

மூன்றாவது நாள் எங்களிடமிருந்த உணவும் தண்ணீரும் தீர்ந்துவிட்டன. நாங்கள் மிகவும் சோர்வடைந்தோம். பத்தாவது நாள் எங்களுடன் பயணித்த ஸ்ரீ கிருஷ்ணன் பசி தாங்க முடியாமல் இறந்தார். அவரின் உடலை படகில் 8 நாட்கள் வைத்திருந்தோம். ஒரு கட்டத்தில் பிரேதம் கெட்டுப் போகத் தொடங்கியது. அதனால், எங்களின் ´ஜாக்கட்´களால் இறந்தவரின் உடலைச் சுற்றி கடலில் விட்டோம்" என்றார்.

தங்கள் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக படகின் அருகில் வரும் ஆமைகளைப் பிடித்து, அவற்றின் கழுத்தை அறுத்து - அதன் போது ஒழுகும் ரத்தத்தை தாங்கள் பருகியதாக ஆரிஸ் கூறினார்.

"பிடிக்கும் ஆமைகளின் ரத்தத்தைப் பருகிய பிறகு, அவற்றினை அவித்து சாப்பிட்டோம்.

தொண்டை மிகக் கடுமையாக காய்ந்த வேளைகளில் கடல் நீரை மிகச் சிறிதளவு பருகினோம்.

20வது நாள் படகொன்றில் வந்தவர்கள் எங்களை காப்பாற்றினார்கள். அவர்கள் திருகோணமலையைச் சேர்ந்த சிங்கள சகோதரர்கள்"..

37 வயதுடைய ஆரிஸ் - மூன்று பெண் பிள்ளைகளின் தந்தை. நம்முடன் பேசிக் கொண்டிருந்த போது, அடிக்கடி கண்ணீர் விட்டழுதார். அவர் மிகவும் பயந்து போயிருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. "இனி வாழ்க்கையில் கடலுக்கே செல்ல மாட்டேன்" என்றார் அவர்.

உயிர் தப்பிய இன்னொரு மீனவர் ஜுனைதீனுக்கு 35 வயதாகிறது. அவரது சொந்த ஊர் சாய்ந்தமருது. கல்முனையில் திருமணம் முடித்துள்ளார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஜுனைதீனிடமும் பிபிசிக்காக பேசினோம். கடலில் பயணித்த கப்பல்கள் தமது படகை மோதும் அபாயத்திலிருந்து மூன்று தடவை தப்பித்த கணங்களை அவர் விவரித்தார்.

"ஒரு நாள் இரவு எங்கள் படகுக்கு நேராக கப்பலொன்று வந்து கொண்டிருந்தது. அது எங்களை மோதி விடும் என்று பயந்தோம். அதனால் ´டார்ச் லைட்´ வெளிச்சத்தை தொடச்சியாக அடித்துக் காட்டிக் கொண்டிருந்தோம். அந்தக் கப்பல் விலகிச் சென்றது. அப்படி மூன்று இரவுகள் நடந்தது.

உணவு, நீர் இல்லாமல் நாங்கள் மிகவும் சோர்ந்து போன சந்தர்ப்பங்களில், படகிலிருந்து இறங்கி - கடல் நீரில் அடிக்கடி மிதந்தோம். அப்படிச் செய்வது எங்களுக்கு சிறிதளவு தெம்பை ஏற்படுத்தியது.

எங்கள் படகு திருகோணமலையிலிருந்து 183 கடல் மைல் தூரத்தில் அலைந்து கொண்டிருந்த போதுதான், நாங்கள் காப்பற்றப்பட்டோம். எங்களை காப்பாற்றியவர்கள், எங்கள் படகையும் கட்டியிழுத்துக் கொண்டு வந்தனர். கரைக்கு வருவதற்கு 3 நாட்கள் ஆனது" என்றார் ஜுனைதீன்.

ஆரிஸ் மற்றும் ஜுனைதீன் ஆகியோர் கரைக்கு வந்தவுடன், திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதனையடுத்து அவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருநாள் சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கு வாக்கு மூலம் வழங்கிய பின்னர், வியாழக்கிழமை இரவு தமது வீடுகளை வந்தடைந்தனர்.

கடலுக்குத் செல்லும் மீனவர்கள், இவ்வாறான ஆபத்துக்களை எதிர்கொள்ளும் போது, எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருத்தல் மிகவும் அவசியமானதாகும் என்பதால், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் கீழ், சாய்ந்தமருது பிரதேசத்தில் இயங்கும் ´ஆழ்கடல் பிரிவு´ அலுவலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி அலுவலர் ஏ.எல். பதுர்ஸமான் என்பவரை சந்தித்துப் பேசினோம்.

கடலுக்குச் செல்வோர் தம்மைப் பற்றிய தகவல்களையும், பயணிக்கும் படகு பற்றிய விவரங்களையும் எம்மிடம் பதிந்து விட்டே பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய பதிவுப் பத்திரமும் உள்ளது. அவ்வாறான மீனவர்களுக்கு ´ரேடியோ கம்யூனிகேசன்´ எனும் செய்மதி(செயற்கைக் கோள்) தொடர்பாடல் வசதி வழங்கப்படுகிறது. அதே போன்று vessel monitoring system (படகு கண்காணிப்பு அமைப்பு) மூலம், பதிவு செய்யப்படும் படகுகள் கண்காணிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். அவ்வாறான படகுகள், இலக்குத் தப்பி காணாமல் போகும் போது, அவற்றினை இலகுவாகக் கண்டு பிடிக்க முடியும்" என்றார் பதுர்ஸமான்.

ஆனாலும், இந்தப் பகுதிகளிலிருந்து படகுகளில் கடலுக்குச் செல்கின்றவர்களுக்கு, செய்மதி தொடர்பாடல் வசதி வழங்கப்படுவதில்லை என்கின்றனர் மீனவர்கள்.

"ஆனாலும் கடலுக்குச் செல்வோரில் கணிசமானோர், தமது படகுகளை எம்மிடம் பதிந்து விட்டுச் செல்வதில்லை" என்று பதுர்ஸமான் கூறுகின்றார்.

"பதிவுக் கட்டணமாக மாதமொன்றுக்கு குறிப்பிட்டதொரு தொகைப் பணம் நாங்கள் அறவிடுகின்றோம். அதனைச் செலுத்துவதற்கு சிலர் விரும்புவதில்லை என்பதால், பதிவு செய்யாமலேயே கடலில் பயணிக்கின்றனர். மேலும், கடல் எல்லையை மீறுகின்றவர்களும் தமது படகை பதிவு செய்வதற்கு விரும்புவதில்லை. அதேபோன்று, கடலில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரும் தமது படகுகளை எம்மிடம் பதிவு செய்யாமல் சென்று விடுகின்றனர்".

"கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் பயிற்சியினை நாம் வழங்குகின்றோம். இதன்போது படகு ஓட்டுதல், கடலில் மூழ்குதல், படகின் இயந்திரத்தை திருத்துதல் உள்ளிட்டவற்றுக்கான பயிற்சிகளையும் வழங்குகிறோம்.

மேலும் கடலில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்களின்போது எவ்வாறு தப்பிப்பது என்பதையும் சொல்லிக் கொடுக்கிறோம்.

உதாரணமாக, கடலில் வழி தவறி நீண்ட நாட்கள் உணவின்றி சோர்வடைய நேரும் போது, தமது பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக கடலில் கிடைக்கும் எவை எவற்றை உணவாக உட்கொள்ள வேண்டும் என்பதை, பயிற்சியின் போது நாம் சொல்லிக் கொடுக்கிறோம்.

கடலில் உணவின்றி உடல் சோர்ந்து போன நிலையில் இருக்கும் ஒருவர், சிவப்பு ரத்தத்தை உடைய மீன்களை சாப்பிடக் கூடாது. அது ஒவ்வாமையினை ஏற்படுத்தும். வெள்ளை போன்ற நிறத்தில் ரத்தத்தை உடைய மீன்களை உண்ணலாம், அவற்றின் முள்ளை உடைக்கும் போது கிடைக்கும் ´ஜெல்´ இனையும் சாப்பிட முடியும். உதாரணமாக நெத்திலி மீனை பச்சையாகவே சாப்பிட முடியும். ஆமையின் ரத்தம் மற்றும் இறைச்சியை உள்கொள்வது நல்லதல்ல.

கடல் நீரை நேரடியாக பருகக் கூடாது. அதனை சூடாக்கி, அதிலிருந்து வெளியேறும் நீராவியை சேகரித்து பருகலாம். அதேபோன்று பனி நீரையும் சேகரித்து பருகலாம்.

கடல் பயணங்களின் போது, உணவாக அவல் கொண்டு செல்லலாம். குறைந்தளவு அவல் சாப்பிட்டால், போதுமாக இருக்கும். அதேபோன்று உரிக்காத தேங்காய்களையும் உணவுக்காக படகில் கொண்டு செல்லலாம். படகு கவிழ்ந்தாலும் உரிக்காத தேங்காய் மிதக்கும். டின் மீனையும் உணவுக்காக எடுத்துச் செல்லலாம்.

அதேவேளை, கடலில் பயணிப்போர் தமது படகுகளில் கொண்டு செல்ல வேண்டிய கொடிகள் உள்ளன. ஆகக்குறைந்தது 10 வகையான கொடிகளையாவது அவர்கள் கொண்டு செல்லுதல் அவசியமாகும். ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தேவைக்கேற்றவாறு ஏற்ற வேண்டிய கொடிகள் உள்ளன. அபாயத்தின் போது உதவிக்கு அழைக்க வேண்டுமாயின், அதற்காக ஏற்ற வேண்டிய கொடி உள்ளது. அதேபோன்று ´அருகில் வராதே´, ´விலகிச் செல்´, ´வலைபோடும் நேரம்´ என்பதையெல்லாம் தெரியப்படுத்துவதற்காக, ஒவ்வொரு வகைக் கொடி உள்ளது. ஆனால், இவற்றினை மிக அதிகமானோர் தம்முடன் கொண்டு செல்வதில்லை" என்றார் அவர்.

கடலுக்குச் செல்கின்றவர்கள் தமது பயண முன் ஆயத்தங்களில் காட்டுகின்ற அலட்சியங்கள்தான், அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை, மேலும் நெருக்கடிமிக்கதாக மாற்றி விடுகிறது என்பதை, பதுர்ஸமான் கூறிய விடயங்களிலிருந்து விளங்கிக் கொள்ள முடிந்தது.

(பிபிசி தமிழ்)

Post a Comment

Previous Post Next Post