“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச பல கொலைகளுக்குக் காரணமானவர். திருட்டுகளுக்கும் உடந்தையானவர்.
அப்படிப்பட்டவரை இலங்கை மக்கள் அடியோடு நிராகரிப்பார்கள். அவரின் தோல்வி இப்போதே உறுதியாகிவிட்டது.” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக சர்வதேச செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
பண்டாரநாயக்க குடும்பத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் ராஜபக்ச குடும்பமே ஆகும்.
அந்தக் குடும்பத்திலிருந்து ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்க முடிவெடுத்தமையை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்திச் சீரழிக்க வேண்டும் என்ற நோக்குடன்தான் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற புதிய கட்சியை ராஜபக்ச குடும்பம் உருவாக்கியுள்ளது.
இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் துணை போயுள்ளார்கள்.
அதாவது இவர்கள் இருவரும் கட்சியைக் காட்டிக்கொடுத்துவிட்டார்கள். எனது தாய் வீட்டை நாசமாக்கியுள்ளார்கள்.
ராஜபக்ச குடும்பத்தின் தாளத்துக்கேற்ப மைத்திரியும், தயாசிறியும் ஆடுகின்றார்கள். இந்த ஆட்டம் நிரந்தரமல்ல. விரைவில் முடிவு கட்டப்படும்” என கூறியுள்ளார்.
Post a Comment