ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (22) கண்டி, மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து, ஊடகங்கள் மூலமாக தனக்கெதிராக மேற்கோள்ளப்பட்டு வரும் விஷமப் பிரசாரங்கள் குறித்து விளக்கமளித்தார்.
அவற்றை கவனமாக செவிமடுத்த சங்கைக்குரிய தேரர், அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கவலையடைவதாக தெரிவித்தார். அத்துடன் அமைச்சர் கூறியவற்றிலுள்ள உண்மைத் தன்மையை ஏற்றுக்கொண்டு, அவருக்கு நல்லாசி வழங்கினார்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறிதாவது;
ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல் குண்டுதாரிகளின் தலைவனாக கூறப்படும் சஹ்ரான் மற்றும் அவனது சகோதரனை நான் சந்தித்ததாக பழைய புகைப்படங்களை வைத்து எனக்கும் பயங்கரவாதத்துடன் சம்பந்தம் இருப்பதாக குறிப்பிட்டு தீயசக்திகள் விஷமப் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன. அப்பாவி சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் தனக்கு இருக்கின்ற நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் பரப்பப்படுகின்றன.
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலையடுத்து காத்தான்குடியில் ஏற்பட்ட குழப்பகார சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும், சேதமாக்கப்பட்ட இடங்களையும் நான் பார்வையிடச் சென்றிருந்தேன். அப்போது மக்களோடு மக்களாகவிருந்த ஸஹ்ரான் மற்றும் அவனது சகோதரனை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர்கள் யாரென்ற விடயம் நான் உட்பட யாருக்கும் தெரியாது. அந்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு குறுகிய நோக்கத்தில் சிலர் அரசியல் ஆதாயம்தேட முற்பட்டுள்ளனர்.
புதன்கிழமை பாராளுமன்றத்தில் இது சம்பந்தமாக உரை நிகழ்த்தவுள்ளேன். எனக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பிரசாரம் பொய் என்பதையும் நான் நிரபராதி என்பதையும் நிரூபிப்பேன். இந்த சதி முயற்சியை யார் வெளிப்படுத்தினார்கள், அவர்களின் பின்னாலுள்ள சக்தி, அவர்களின் பின்னணி குறித்து நான் விளக்கமளிப்பேன்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை நாளை புதன்கிழமை கையளிக்கப்படவுள்ளது. இதன்பின்னர் ஊடகவியலாளர் மாநாடொன்றும் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது என்மீது கேள்வியெழுப்பப்பட்டால், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் பல ஆதாரங்களை அம்பலப்படுத்துவதற்கும் தயாராகவுள்ளேன்.
எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன், நான் பிரசாரம் செய்கின்ற வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை தடுப்பதற்குமான குழிபறிப்பு முயற்சியாகவே இதனைப் பார்க்கிறேன். இப்படியான சதித்திட்டங்களை முறியடித்து எமது வேட்பாளர் வெற்றிபெறுவார். மக்கள் அவரின் பக்கமே நிற்கின்றனர் என்றார்.
Post a Comment