- ஊடகப்பிரிவு -
தேசியப்பட்டியல் எம்.பி பதவிக்கும் தூதுவர் பதவிக்கும் நிறுவனங்களின் தலைவர் பதவிகளுக்கும் சோரம் போன நம்மவர்கள் கொந்தராத்து ஒப்பந்தங்களை எடுத்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் வாக்கு கேட்டுவருவது வேடிக்கையான என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்ட போது, அவற்றைப் பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களும், தாக்குதல் நடந்த காலங்களில் வீடுகளிலேயே பெட்டிப்பாம்பாக பேசா மடந்தையாக இருந்தவர்கள் இப்போது பாதிக்கப்பட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்குச் சென்று மக்களிடம் சென்று ஆசை வார்த்தைகளை கூறி வாக்குகளை சேகரிக்க துடிக்கின்றார்கள்.
குருநாகல் மாவட்டத்தில், பானகமுவ, தல்கஸ்பிட்டிய, தித்தவெல்கல, தோரக்கொட்டுவ, சியம்பலகஸ்கொட்டுவ, கலேகம, ஹொரம்பா ஆகிய பிரதேசங்களில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அமைச்சர் கூறியதாவது ;
நமது சமூகம் நொந்து போயிருக்கின்றது. சுமார் 10 வருடங்களாக நிம்மதியை தொலைத்து அமைதியை இழந்து ஏக்கத்துடன் வாழ்கின்றோம். யுத்தம் முடிந்த கையோடு ஒரு கூட்டம் நமது சமூகத்தின் மீது தமது இனவாதப் பார்வையை செலுத்த தொடங்கியது. நமது மதக் கடைமைகளை செய்ய விடாமல் தடுத்தது. எவ்வித காரணங்களும் இன்றி பள்ளிவாயல்களையும் உடைமைகளையும் மத்ரசாக்களையும் வீடுகளையும் நாசப்படுத்தியது.
இந்த அட்டூளியங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு அப்போது கோரிக்கை எழுந்த போதும் கடந்த அரசாங்கம் அதனைச் செய்யவில்லை. வன்முறைகளை கட்டுப்படுத்தவுமில்லை இனவாதிகளை வளர்த்து இன்பம் கண்டது.
எனவே தான் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு ஆட்சியை மாற்றி அமைத்தது. அரசியல் தலைமைகளும் சமூகத்தின் வழியில் பயணித்தன மைத்திரியை கொண்டுவந்தோம் நல்லாட்சி என்ற போர்வையில் இரண்டு கட்சிகள் ஆட்சியை நடத்தியதால் ஏற்பட்ட இழுபறியின் காரண்மாக நமது சமூகத்தின் எதிர்பார்ப்பு வீணாகியது . நிம்மதி கிடைக்கவில்லை அமைதி இழந்து தவித்தோம்.
திகன, ஜிந்தோட்ட, அம்பாறை ஆகிய இடங்களில் நாசகாரிகள் தமது செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுத்தனர். எனினும் மஹிந்த அரசாங்கத்துடன் ஒப்பிடும் போது தற்போதிய அரசாங்கம் ஓரளவாவது நாசகார செயலை கட்டுப்படுத்தியது. குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டனர். நீதி நிலைநாட்டப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி இனவாத ஏவலாளிகள் தமது கைங்கரியத்தை காட்டத் தொடங்கினர். குருநாகல், குளியாப்பிட்டி, கொட்டராமுல்லை மற்றும் மினுவாங்கொடவில் நடைபெற்ற அட்டூழியங்கள் மற்றும் அநாகரிகச் செயற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ தெரிந்திருந்தும் தங்களுடன் கட்சியுடன் ஒட்டி இருக்கும் இனவாதிகள் பற்றி அவர் ஒரு வார்த்தைதானும் பேசவில்லை. அலட்டிக்கொள்ளவுமில்லை.
விழுந்துகிடக்கும் தனது அதிகாரத்தையும் ஆட்சியையும் மீள நிலைநிறுத்துவதற்காக யார் அழிந்தாலும் பரவாயில்லை என்ற மனோபாவத்திலையே அவரும் அவர் சார்ந்த கட்சியும் இருந்தது. எந்த ராஜபக்ஷக்களும் முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்கவும் இல்லை. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லவும் இல்லை. ஆகக் குறைந்தளவு குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தனது மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை பார்வையிடச் செல்லவில்லை. இப்போது, வாக்குக்காக அந்த பிரதேசங்களுக்கு படையெடுக்கின்றனர். பள்ளிவாசல்களை உடைத்தவர்கள் பள்ளிக்குள் கதிரை போட்டு உட்கார்ந்து வாக்கு கேட்கும் நிலையை இறைவன் உருவாக்கியுள்ளான். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Post a Comment