ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் பக்தாதி கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி செய்தார்.
வேவுத் தகவலின் அடிப்படையில், பக்தாதியின் இருப்பிடத்தை அறிந்த அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு படையினர் அவரைத் தேடிச் சென்று முடக்கினர்.
அமெரிக்க இராணுவத்தின் மோப்ப நாய்களால் விரட்டப்பட்டு, வெளியேறும் வழியில்லாத சுரங்கத்துக்குள் புகுந்த பக்தாதி தமது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்ததாக கூறப்பட்டது.
மேலும் பக்தாதியின் இழப்பு ஐ.எ.ஸ் பயங்கரவாத அமைப்பிற்கு பேரிடியாக அமையும் என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார்.
பக்தாதியின் மரணத்துக்குக் காரணமான துருப்பினருக்குத் தமது பாராட்டுகளைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 5 ஆண்டுகளாக சிரியா, ஈராக் பகுதிகளை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பல பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment