ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராகவில்லை. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக பிரசாரங்களை செய்யமாட்டோம் என சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் வாக்குறுதி வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இறுதி நிலைப்பாட்டின் பின்னர் சஜித்தின் வேண்டுகோளுக்கு பதில் கூறுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்த நிலையில் தேசிய அரசாங்கம் குறித்த பல விடயங்களை கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பில் ஜனாதிபதியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர மற்றும் லசந்த அலகியவன்ன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
கடந்த வாரம் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் மூலமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகரவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அழைப்புக் கடிதத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட இந்த பேச்சுவார்த்தையில் ஆரம்பத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிப்பது குறித்தும் பொதுக் கூட்டணியாக ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் பயணிப்பது குறித்தும் ஐக்கிய தேசிய கட்சியினர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் ஒத்துழைப்புகளை வழங்க முடியமா எனவும் வினவியுள்ளனர்.
எனினும் இதற்கு பதில் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன :- ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கமாக கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசாங்கம் ஆட்சி செய்யும் விதத்தில் பாரிய பிரச்சினைகள் உள்ளன. மக்களுக்கு இன்று அரசாங்கம் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கூட்டணியை அமைக்க முடியாது. அதுமட்டும் அல்ல ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் கொள்கை அளவில் கூட பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இன்று ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைத்திட்டங்களை பகிரங்கமாக விமர்சித்துக்கொண்டு தேர்தலில் எவ்வாறு கூட்டணியை அமைக்க முடியும்? ஆகவே இது ஒருபோதும் சாத்தியமாகாத விடயமாகும். மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணியை அமைக்க நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கருத்துக்கள் தொடர்பில் வேட்பாளர் சஜித் கூறுகையில், ஜனாதிபதி முன்வைத்த காரணிகளை ஏற்றுக்கொள்கின்றோம். கடந்த நான்கு ஆண்டுகளில் தவறுகள் நடக்காமல் அல்ல. ஆனால் எனது ஆட்சியில் அவ்வாறு எந்த தவறுகளும் நடைபெறாத வகையில் நான் பார்த்துக்கொள்கிறேன். எனக்கு சகலரதும் ஆதரவு வேண்டும் என்றே நினைக்கிறேன் அதற்காகவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் இணைந்துக்கொண்டு பயணிக்க முயற்சிக்கின்றேன் என்று கூறியுள்ளார்.
எனினும் தாம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அவர்களுடன் கூட்டணியை அமைக்கவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு எதிரான பிரசாரங்களை நான் செய்ய மாட்டேன். ஆனால் நாம் இப்போதும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணையும் பேச்சுவார்த்தையே முன்னெடுக்கிறோம். அதில் வெற்றி பெற்றால் நாம் அவர்களுடன் இணைந்தே செயற்படுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் தமது கொள்கை திட்டத்துக்கு இணங்கினால் நாம் அவர்களுடன் கைகோர்ப்பதே எமக்குள்ள தெரிவாகும் என்ற காரணிகளை கூறியுள்ளார். எவ்வாறு இருப்பினும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இறுதி நிலைப்பாட்டின் பின்னர் தங்களின் கோரிக்கைகள் குறித்து பதில் தெரிவிக்கப்படும் என்பதை ஜனாதிபதி கூறியுள்ளார்
Post a Comment