சம்பள உயர்வில் நாங்கள் பாரிய புரட்சிகளை செய்திருக்கிறோம். மக்களின் வாழ்வாதார செலவு அதிகரித்துள்ள போதிலும், கடந்த அரசாங்கத்தை விட பாரிய விலைக்குறைப்புகளையும் செய்திருக்கின்றோம். நாங்கள் அவற்றை விளம்பரப்படுத்தாமையினால்தான் அதுகுறித்து யாரும் பேசுவதில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) பேராதனையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர் மேலும் கூறியதாவது;
பல்கலைக்கழகங்களிலுள்ள கல்விசாரா ஊழியர்கள் நீண்டதொரு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. சில பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் நான்கு இலட்சம் ரூபாவுக்கு அதிகமான சம்பங்களைப் பெறுகின்றனர். ஏனைய பதவிகளில் இருப்போருக்கு ஓரளவேணும் சலுகைகளை வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த அரசாங்கத்தில் பேராசிரியர்கள் பெற்ற சம்பளம் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா. ஆனால், எமது அரசாங்கத்தில் இத்தொகை மூன்று மடங்குகளால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவு 106% அதிகரிக்கப்பட்டுள்ளது இந்த அரசாங்கத்தின் சாதனையாகும். சம்பள உயர்வில் நாங்கள் பாரிய புரட்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். ஆனாலும், இதுதொடர்பில் யாரும் பேசுவதில்லை.
மக்களின் வாழ்வாதார செலவு அதிகரித்துள்ள போதிலும் பாரிய விலை குறைப்புகளும் இடம் பெறாமலில்லை. இவை மக்கள் மத்தியில் விளம்பரம் செய்யப்படாமையே எமது அரசாங்கத்தின் பாரிய குறைபாடாகும். முன்னைய அரசாங்கத்தின் விலைவாசிகளை ஒப்பிடுகையில் நாங்கள் எவ்வளவோ முன்னோக்கிச் சென்றிருக்கிறோம்.
ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 300 மில்லியன் ரூபா வேறு எந்த அரசாங்கத்திலும் ஒதுக்கவில்லை. இந்த அரசாங்கத்தில் அதனை செய்துகாட்டியிருக்கிறோம். அதேபோல் பள்ளிவாசல், கோயில், தேவாலயம், விகாரை என மதஸ்தளங்களுக்கும் மில்லியன் கணக்கில் அபிவிருத்திக்கான நிதிகளை ஒதுக்கியிருந்தோம்.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் பிரசாரம் ஒன்றுக்காக பொத்துவில், லபுகந்த பிரதேசத்துக்கு சென்றிருந்தபோது, அங்கு இருநூறுக்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்துக்கு வருகைதந்திருந்தனர். இவர்களில் ஐம்பதுக்கு மேற்பட்ட பெண்கள் வீடு வீடாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருதடவையாவது சஜித் பிரேமதாசவை சந்திப்பதற்கு தேர்தல் கூட்டமொன்றை நடாத்துமாறு ஆவலுடன் கேட்கின்றனர்.
தெஹியத்த கண்டியிலிருந்தும் ஒரு குழுவினர் கல்முனையில் என்னை சந்தித்தனர். அம்பாறை நகரில் நடைபெறும் பிரசார கூட்டத்துக்கு சஜித் பிரேமதாச செல்வதால், அவர் எங்களது பிரதேசத்துக்கு வரமாட்டார். எனவே, கல்முனையில் நடைபெறும் அவரது கூட்டத்தில் நாங்கள் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தாருங்கள் என்று கேட்டார்கள். சஜித் பிரேமதாசவுக்கான கிராம மட்டத்திலான ஆதரவுத்தளம் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளது.
மீண்டுமொரு ராஜபக்ஷ ஆட்சி வேண்டாம் என்பதில் முஸ்லிம் மக்கள் தெளிவாக இருக்கின்றனர். அவர்கள் கோட்டபாயவுக்கு வாக்களிக்கப்போவதில்லை. தமிழ் மக்கள் தங்களது வாக்குளை சஜித் பிரேமதாசவுக்கு அளிப்பதில் உறுதியாக இருக்கின்றனர். தமிழ் கட்சிகள் இன்னும் தங்களுடைய முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவிக்காவிட்டாலும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்களது வேட்பாளருக்கே ஆதரவளிப்பார்கள்.
சிறுபான்மை சமூகங்கள் உட்பட இன, மத, குல பேதமின்றி அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செல்வாக்கு பெற்ற ஒருவரையே நாம் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஒருவரே இந்த நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க முடியும். தற்போது சஜித் பிரேமதாசவின் வெற்றியை அனைத்து தரப்பினரும் நாளுக்கு நாள் உறுதிசெய்துகொண்டே இருக்கின்றனர்.
ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
Post a Comment