Top News

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் திறந்த மனதுடன் பேசத் தயார் - சிறிநேசன்



தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் திறந்த மனதுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்துவதற்கு தயாராகயிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - மாமாங்கத்தில் அவரது அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,


சமகால நிகழ்வுகளை அலசிப்பார்க்கின்ற போது அண்மையில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேர்தல் கூட்டுரிமைக்குரிய ஒப்பந்தத்தை செய்திருக்கின்றார்கள்.

இவ்விடயத்தைப் பொறுத்தவரையில் ஆரம்ப காலத்தில் பொதுச்சின்னத்தில் தான் போட்டியிடுவது, மொட்டுச்சின்னத்தில் போட்டியிட முடியாது என அடம்பிடிப்பாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்போது பொதுஜன பெரமுனவோடு சங்கமமாகி இருப்பதுபோல தெரிகின்றது.

இந்தக்கூட்டு எதிர்பாராதது என்றாலும் அனேகமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பொதுஜன பெரமுனவோடு இணைந்ததை காணமுடிந்தது.


குமார் வெல்கம எந்தவொரு காரணத்திற்காகவும் மொட்டுக்கட்சி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களிக்க மாட்டேன் என்ற சிந்தையோடு இருக்கின்றார்.

ஆகையால் இந்த இணைப்பானது நூற்றிற்கு நூறு வீதமான இணைப்பு என சொல்ல முடியாதுள்ளது. இருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவோடு இணைந்தது அவர்களுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இம்முறை நடைபெறவிருக்கின்ற தேர்தல் நிலைமைகளின்போது பலமானதொரு பலப்பரீட்சை நடைபெறவிருப்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

அதே நேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது கடந்த காலத்தில் எங்களுக்கு என்ன செய்தது என்பதை பார்க்கவேண்டியதாக இருக்கின்றது.


பண்டா செல்வா ஒப்பந்தமானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பண்டாரநாயக்க அவர்களினால் செய்யப்பட்டு பின்னர் கிழித்தெறியப்பட்ட வரலாறு இருக்கின்றது.

அதேபோன்று மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தபோது புரையோடிப்போயிருக்கின்ற தேசிய இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்ற உறுதி வாக்கோடு வந்திருந்தார்.ஆனால் இப்போது அவற்றையெல்லாம் கை நழுவ விட்டிருக்கின்றார்.

அதேநேரம் இன்னுமொரு விடயத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது திறந்த மனதோடு எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்துகின்ற நிலைப்பாட்டில் இருக்கின்றது.இந்தப் பேச்சு வார்த்தைகளின் போது நம்பகமாகத் தருகின்ற உறுதிமொழிகளை சீர்தூக்கிப் பார்க்கின்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.

இரு பிரதான கட்சிகளும் தேசியப் பிரச்சினைக்கு தீர்வை காண்பதில் இவ்வளவு காலமும் இழுத்தடிப்புகளை செய்து தவறான பாதைக்கு கொண்டு சென்ற கட்சிகள் எனச் சொல்லலாம். ஆகவே இருசாராருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

ஐக்கிய தேசிய முன்னணியைப் பொறுத்தவரையில் புதியதொரு தலைமைத்துவம் என்பதை விட புதியதொரு வேட்பாளர் தற்போது நிறுத்தப்பட்டிருக்கின்றார்.

கோத்தபாய ராஜபக்ச புதிய வேட்பாளராக இருந்தாலும் இருவரது நிலைமைகளையும் சீர்தூக்கிப் பார்க்கின்ற போது ஒருவர் இராணுவ மயப்படுத்தப்பட்ட சிந்தனையைக் கொண்டவராகவும், இராணுவ மயப்படுத்தப்பட்ட கருத்துகளை வெளியிடுபவராகவும், கடந்த காலத்தில் இராணுவ மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளில் மும்முரமாக செயற்பட்ட ஒருவர் மற்றையவர் ஜனநாயக ரீதியாக சிந்திக்கின்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்.


இந்த இருவரின் சிந்தனைகள், கருத்துக்கள், செயற்பாடுகள் எப்படி இருந்தது என்பது பற்றி மக்கள் அலசி ஆராய்ந்துகொண்டு இருக்கின்றனர். தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தமட்டில் இந்தவிடயத்தை அக்குவேறு ஆணி வேறாக சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நாட்டிலிருக்கின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளான தேசிய இனப்பிரச்சினை என்ற விடயம், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், கைதிகள் ஆக்கப்பட்டவர்கள், வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான விடயம், வேலைவாய்ப்பு தொடர்பான விடயம் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் காணப்படுகின்றன.

தேசிய இனப்பிரச்சினை விடயம் மிக முக்கியமானதாக இருக்கின்றது. இந்த விடயங்கள் பற்றி இரண்டு,மூன்று வேட்பாளர்களுடன் கதைக்க வேண்டி இருக்கின்றது. அநுரகுமார திசாநாயக்க கூட ஒரு முற்போக்கான சிந்தனையுடன் போட்டியிட்டுக்கொண்டிருக்கின்றார்.

இவ்வாறான நிலைமையில் மூவரோடும் பேச்சுவார்த்தை நடத்துகின்றபோது அவர்களிடம் இருக்கின்ற உளத்தூய்மையாக தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அவர்கள் என்ன நினைக்கின்றனர், வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான விடயம் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், கைதிகள் ஆக்கப்பட்டவர்கள் விடயம் போன்ற விடயங்களை நாங்கள் நன்றாக அலசி ஆராய்ந்த பின்னர் தான் முடிவுகளை எடுப்போம்.

ஆனால் ஒரு வகையில் நாங்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக இருக்க வேண்டும், தங்களின் மேலாதிக்கத்தின் கீழ் அடங்கி வாழவேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுகின்ற எந்தவொரு வேட்பாளருக்கும் எங்களது மக்கள் வாக்களிக்க தயாராக இல்லை.


மக்கள் தற்போது நன்கு சிந்திக்கக்கூடிய நிலையில் இருக்கின்றனர். அவர்களின் சிந்தனை சரியான முடிவை எடுக்கக்கூடிய நிலைக்கு அவர்களை கொண்டு செல்லும் என்பது தெரியும்.

தற்போதிருக்கின்ற தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தமட்டில் வித்தியாசம் வித்தியாசமான கருத்துகளை சொல்கின்ற நிலையில் காணப்படுகின்றனர். தேர்தலை பகிஷ்கரிப்பது என்கின்ற விடயத்தை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கூறியிருக்கின்றார்.

2005ஆம் ஆண்டில் தேர்தலை பகிஷ்கரித்ததன் விளைவு என்ன என்பதைப்பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். அந்த பகிஷ்கரிப்பின் மூலம் யாருக்கு நாங்கள் சந்தர்ப்பத்தை வழங்கப் போகின்றோம் என்பது முக்கியமான விடயமாகும். பின் விளைவுகள் பற்றி சிந்திக்காமல் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிப்பு செய்யக்கூடாது.

வடக்கு, கிழக்கு மக்களின் தேர்தல் பகிஷ்கரிப்பு காரணமாக வெற்றி பெற்றவர் எங்களுக்கு நன்மை செய்தாரா தீமை செய்தாரா என்கின்ற விடயமெல்லாம் இருக்கின்றது.

கடந்த கால படிப்பினைகளை மறந்துவிட்டு வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போன்றும் மரத்தால் விழுந்தவனை மாடு மிதிப்பது போன்றுமான விடயங்களில் ஈடுபடக்கூடாது என்பது மக்களின் பொதுவிருப்பமாக அமைந்திருக்கின்றது.

தற்போது அரசியலில் கோமாளி வித்தைகளும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இந்தியாவில் சில அரசியல் கோமாளிகள் இருப்பது போன்று இலங்கையிலும் அரசியல் கோமாளித்தனம் இப்போது அரங்கேற்றப்பட்டிருக்கின்றது.

அனந்தி சசிதரன் தேர்தலில் போட்டியிடச் சென்றபோது அவருக்கு கடைசியின் தலைவர் என்ற வகையிலோ, கடந்தகால நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலோ அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.அந்த வெற்றிடத்தினை சிவாஜிலிங்கம் நிரப்பியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு விமோசனத்தினை தரக்கூடிய செயற்பாடுகளாக இருக்கமுடியாது.ஏதோ ஒரு கட்சியின் பின்னணியில் ஏதாவது பெற்றுக்கொண்டே இவர்கள் போட்டியிடுகின்றார்கள் என்ற விடயங்கள் தெளிவாக தெரிகின்றது.

தமிழ் மக்கள் ஒருபோதும் ஏமாளிகளாக இருக்கமாட்டார்கள். ஏமாற்றுபவர்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒருபோதும் இடமில்லை.ஏமாளிகளாக இருக்காமல் தமிழ் மக்கள் சரியான தீர்வினை எடுப்பார்கள்.


கடந்த காலத்தில் வடகிழக்கு மக்களுக்கு நன்மை செய்தவர்கள் யார்,தீமை செய்தவர்கள் யார் என்பது பற்றி சிந்திக்கவேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post