நூருள் ஹுதா உமர்.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற வில்லை. 43 தடவை சந்தித்து பேசியும் எந்த முடிவும் இல்லாமல் இழுத்தடிக்கப்படுகிறது. மு.கா தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், குறித்த இலாக்காவுக்கு சொந்தமான அமைச்சர் வஜிர, அமைச்சர் றிசாத் உட்பட எல்லோரும் எங்களது கோரிக்கையை ஏற்றும் எங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தான் அதனை தடுக்கிறார். அவர்களின் கடந்த உயர்பீட கூட்டத்தில் சாய்ந்தமருதுக்கு சபை கொடுத்தால் இரத்த ஆறு ஓடும் என்று பேசியதாக அறிகிறோம் என சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா தெரிவித்தார்.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய மக்கள் பணிமனை இன்று பகல் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மிகநீண்டகாலக் கோரிக்கையான சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபைக்கோரிக்கை பல முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டும் இற்றைவரை வழங்கப்படாமல் நொண்டிச் சாட்டுக்களைக்கூறி காலம் கடத்தி வருவதையிட்டு எமது பலத்த கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கல்முனை காவலனாக பேசப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கல்முனை பிராந்தியத்தில் உள்ள சாய்ந்தமருது பிரதேசத்திற்கு சபையை வழங்க தயாராக உள்ளேன் என பகிரங்கமாக அறிவிப்பாரா என சவால் விடுக்கிறேன் என வை.எம். கனிபா அம்மாநாட்டில் சவால் விடுத்தார்.
அங்கு பேசிய கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர். எம். அஸீம், ஹரீஸ் எம்.பி எந்த கட்சியை ஆதரிக்கிறாரோ அந்த கட்சியை நாங்கள் எதிர்ப்போம். 1987 தொடக்கம் இற்றை வரைக்கும் பல்வேறு தரப்பு அரசியல் வாதிகளிடமும் எமது கோரிக்கை முன்வைக்கப்பட்டும் அவை நியாயமற்ற காரணங்களைக்காட்டி வேண்டுமென்றே இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றமை வெளிப்படையானதாகும் என்றார்.