(கரைச்சி நிருபர்)
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஜீ .சுகுணனும் அக்கரைப்பத்து வைத்தியசாலைப் பணிப்பாளராக வைத்திய கலாநிதி.ஐ. எம் . ஜவாஹிரும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.ஷகீலா இஸடீனும் நியமிக்கப்பட்டு பதவியேற்றிருந்தனர்.எனினும் இந்த நியமனங்கள் சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிமின் தொடர் அழுத்தத்தின் காரணமாக வழங்கப்பட்ட நியமனங்கள் என அரச மருத்துவர் சங்கத்தால் கடும் ஆட்சபனை தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் காலத்தில் இவ்வாறான நியமனங்களை வழங்கப்பட முடியாது எனவும் இவை சுகாதார சேவையில் உள்ள சேவை தகுதி, மூப்பு அடிப்படையிலான நியமன விதிமுறைகளுக்கும் , பொதுசேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட நியமனங்களுக்கும் முற்றிலும் முரணானது எனவும் ,அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக மேற்படி முறையற்ற நியமங்களை மீளப்பெறாத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை கிழக்கு மாகாணத்தில் நடத்துவதோடு மட்டுமல்லாமல் தேர்தல் ஆணைக்குழுவை நாடி மேற்படி முறையற்ற நியமனங்களை மீளப்பெற வேண்டிவரும் என சுகாதார அமைச்சிடம் அரச மருத்துவர் சங்கத்தால் கூறப்பட்டதையடுத்து மேற்படி முறையற்ற அரசியல் நியமனங்கள் சுகாதார அமைச்சால் நேற்று (16) இரத்துச் செய்யப்பட்டது.