Top News

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய பட்டியல் MP களுக்கு 10 ஆம் திகதி வரை காலக் கெடு..!



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூலம் தேசிய பட்டியலுக்கு ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகி ஏனைய கட்சிகளில் இணைந்து செயற்படும் உறுப்பினர்களுக்கு சுதந்திர கட்சியின் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாவதற்கு இம் மாதம் 10 ஆம் திகதி வரை காலக் கெடு வழங்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவித்ததாவது : 

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோருக்கு கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி ஒழுக்காற்று கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கிணங்க இம் முவரையும் இம் மாதம் 5 ஆம் திகதி ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று விஜித் விஜயமுனி சொய்சா மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோருக்கும் சென்ற மாதம் அதே திகதியில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களில் விஜித் விஜயமுனி சொய்சாவை இம் மாதம் 9 ஆம் திகதியும், ஏ.எச்.எம்.பௌசியை 10 ஆம் திகதியும் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் தவிர சுதந்திர கட்சியூடாக பிரதேச சபைகளுக்கு தெரிவாகி இதேபோன்று வேறு கட்சிகளில் செயற்பட்ட ஐவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களது கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு மேலும் 25 பிரதேச சபை உறுப்பினர்களது கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இவர்களையும் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Post a Comment

Previous Post Next Post