Top News

கோட்டாவை கொலை செய்ய திட்டம் : 5 வர் அதிரடியாக கைது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள நபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க செய்ய மினுவாங்கொட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரை கொல்ல இவர் சதித்திட்டம் தீட்டியதாக, நீதிமன்றத்தில் பொலிசார் தெரிவித்தனர்.

அவருடன் கைதானவர்கள், இந்த விவகாரத்தில் தொடர்புபட்டமைக்கான சான்றுகள் கிடைக்காதமையினால் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடியை சேர்ந்த 27 வயதானவரே, கொலை முயற்சி சந்தேகநபர் என பொலிசார் தெரிவித்தனர். அவர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கவும், விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சீதுவ, ஜயவர்தனபுர, அமந்தோலுவ பிரதேசத்தில் ஒரு வீட்டில் இவர்கள் வாடகைக்கு தங்கியிருந்தபோது, கட்டுநாயக்க பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஓட்டமாவடியை சேர்ந்த முகமது றிப்கான், கிளிநொச்சி அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் மதன், விசுவமடு தர்மபுரத்தைச் சேர்ந்த வேலு கோணேஸ்வரம், விசுவமடு கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த குணரத்னம் நகுலேஸ்வரன், மற்றும் மஸ்கெலியாவைச் சேர்ந்த ஆரியராஜன் கமலராஜா என்பவர்களே கைது செய்யப்பட்டவர்கள் என இன்று காலையில் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

சிங்கள ஊடகங்களின் தகவலில்,

கைதுசெய்யப்பட்ட மதன் எனும் சந்தேகநபருடைய சகோதரிகள் இருவர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் எனவும், அவர்களில் ஒருவருக்கு இதுவரை புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை என்பதுவும் விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 28 ஆம் திகதி இந்த சந்தேகநபர்கள் ஐவரும் ஒன்றிணைந்து மதுபானம் அருந்தி இந்த சூழ்ச்சியை தீட்டியுள்ளனர். இதில் பிரதான சூத்திரதாரியாக றிப்கான் என்பவர் இனம்காணப்பட்டுள்ளார். இவர் வெளிநாடுகளில் வேலை செய்தவர். ஹிந்தி மற்றும் பிறமொழிகளில் பரிச்சயமானவர்.

அத்துடன் முன்னாள் முஸ்லிம் அமைச்சரின் நெருங்கிய தொடர்பும் இவருக்கு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அவர் சிக்கினால் அந்த அமைச்சரின் செல்வாக்கின் மூலம் வெளிவர முடியும் என அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார் எனவும் குறித்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது

ஆதவன்

Post a Comment

Previous Post Next Post