கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றும் நடவடிக்கை நேற்று கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.
வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த தகவல்களை வெளியிட்ட செய்தியாளர் சந்திப்பை ஒழுங்கு செய்தார் என்ற குற்றச்சாட்டில் ராஜித சேனாரத்னவுக்கு கொழும்பு நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 24ஆம் நாள் இரவு ராஜித சேனாரத்ன கொழும்பு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மறுநாள் அங்கு சென்று பார்வையிட்ட கொழும்பு மேலதிக நீதிவான், மருத்துவமனையிலேயே அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கொழும்பு தனியார் மருத்துவமனைக்குச் சென்று ராஜித சேனாரத்னவை பரிசோதித்த சிறைச்சாலை மருத்துவமனை மருத்துவர், அவரை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்ற முடியும் என பரிந்துரைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றுக்காலை ராஜித சேனாரத்னவை சிறைச்சாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக நோயாளர் காவு வண்டியுடன் சிறைச்சாலை அதிகாரிகள் தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர்.
எனினும், ராஜித சேனாரத்னவை கொண்டு செல்லாமல் சிறைச்சாலை அதிகாரிகள் வெறும் கையுடன் திரும்பினர். அவரை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றும் நடவடிக்கை கடைசி நேரத்தில் இடைநிறுத்தப்பட்டது.
ராஜித சேனாரத்னவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் வெளியிட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் பந்துல ஜயசிங்க “ ராஜித சேனாரத்னவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, சிறைச்சாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு மருத்துவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அவரை அங்கிருந்து கொண்டு சென்ற பின்னர், ராஜித சேனாரத்னவுக்கு ஏதும் ஏற்பட்டால் தாங்கள் பொறுப்பாளிகள் அல்ல என்று மருத்துவர்கள் சிறைச்சாலை ஆணையாளருக்கு தெரிவித்ததை அடுத்தே இந்த முடிவு இடைநிறுத்தப்பட்டது” என்று கூறினார்.
Post a Comment