முஸ்லிம்கள் ஆதரித்துருவாகாத ஆட்சியே காலத்தின் தேவை. தற்போதைய பிரச்சினைகளுக்கு அவர்களாலேயே முற்றுப்புள்ளியிட முடியும்.
அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பேரின மக்களின் அபரிதமான வாக்குகளால் கோத்தாபாய ராஜபக்ஸ வெற்றிவாகை சூடியிருந்தார். இத் தேர்தலில் அவரை சிறுபான்மை மக்கள் பெருமளவு நிராகரித்த நிலையிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக அவர் சிறுபான்மை மக்களை பழி வாங்குவார் எனும் வகையிலான அச்சத்தை பலரிடையே அவதானிக்க முடிகிறது. "அல்லாஹ் சூழ்ச்சியாளர்களை எல்லாம் மிஞ்சிய மிகப் பெரும் சூழ்ச்சியாளன், அவனின் நாட்டமின்றி எதுவும் நடந்துவிடாது " என்பதை நாம் ஈமான் கொண்டவர்களல்லவா? இதிலும் நலவில்லாமலில்லை.
இத் தேர்தலில் மிகப் பெரும் தாக்கம் செலுத்திய ஒரு விடயம் தான் ஈஸ்டர் தாக்குதலாகும். இது போன்று மீண்டும் தாக்குதல் நடைபெறாது தடுத்தல், குற்றவாளிகளை கைது செய்தல் ( அவர்கள் குற்றவாளிகளாக கருதுவோரை ) போன்றவற்றை மையப்படுத்தியே இத் தேர்தலில் பேரினமக்கள் வாக்களித்துமிருந்தனர்.
இத் தாக்குதலின் பின்னர் சிங்கள மக்களிடையே பல்வேறு விதமான இனவாத கருத்துக்கள் சென்றிருந்தன. அ.இ.ம.காவின் தலைவர் றிஷாத் பதியுதீன், முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருந்தனர். டொக்டர் சாபி மீது மிகக் கடுமையான கருத்தடை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இன்றும் நீநிமன்றம் ஏறித் திரிவதோடு ஓடி ஒழிந்து வாழ்ந்துகொண்டுமிருக்கின்றார். இப்படி ஆயிரமாயிரம் இனவாத குற்றச்சாட்டுக்களுள்ளன. இதில் சிலவை திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டிருந்தாலும், இன்னும் சிலவை தவிர்க்க இயலாத சந்தேகத்தால் எழுந்தவைகள்.
இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். எப்படி முற்றுப்புள்ளி வைப்பது, யாரால் முடியும் எனச் சிந்தித்தால், அதற்கு இவ் ஆட்சியே மிகப் பொருத்தமானது என்பதே உண்மை. இன்றைய ஆட்சிக்கு முஸ்லிம் மக்களின் ஆதரவுமில்லை, அரசியல் வாதிகளின் ஆதரவுமில்லை. சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் பழி வாங்ககிடுவார்கள் என்பது யாவருமறிந்ததே! மிகப் பெரும் தீவிரவாத குற்ச்சாட்டு முன் வைக்கப்பட்ட அ.இ.ம.காவின் தலைவர் றிஷாத் எதிர்க்கட்சியிலுள்ளார். அவருக்கு தற்போதைய அரசில் எவ்வித அதிகாரமுமில்லை. இப்போது பேரின மக்கள் நினைத்தவாறு, கடந்த ஆட்சியில் முன்னெடுக்கப்படாத நீதியான விசாரணையை முன்னெடுக்கலாமல்லவா?
மடியில் கனமிருந்தால் தான் பயம். கனமிருந்தால் தண்டனை அனுபவிக்கவும் வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. டொக்டர் சாபி கருத்தடை செய்ததாக கூறிய பெண் கர்ப்பமாகிவிட்டார். எப்படி டொக்டர் சாபியை கூண்டிலடைப்பது. இன்று இத் தாக்குதலோடு ஏதாவதொரு சிறிய தொடர்பிருந்தவர் வெளியில் இருந்தாலும் கைது செய்யப்பட்டு, இனவாதிகளுக்கு தீனி போட்டிருக்கும் இவ்வரசு. இதனையே அவர்களுக்கு வாக்களித்தளித்தவர்கள் எதிர்பார்த்துமுள்ளனர். நடந்தேறியது எதுவுமல்ல. இது எம் சமூகத்தை பேரின மக்கள் மத்தியில் நிரபராதியாக்கிக் கொண்டிருக்கின்றது.
தற்போது இனவாதிகள் " ஏன் டொக்டர் சாபி, ஹக்கீம், றிஷாத் ஆகியோர் கைது செய்யப்படவில்லையென" வினவ ஆரம்பித்துள்ளனர். அ.இ.ம.காவின் தலைவர் றிஷாத், தான் குற்றவாளியாக இருந்தால் கைது செய்யுமாறு ஜனாதிபதிக்கே கடிதம் வரைந்துள்ளார். எனவே, இவ்விடயத்தில் நடந்தேறிய உண்மைகளை இவ்வரசு கூறி தலை கழற வேண்டும். கடந்த அரசை குற்றம் சுமத்தலாம். இது தவிர்ந்து வேறு வழி ஏதுமில்லை. அது எமக்கு தேவையற்றது. அது எம்மை பாதிக்கவல்லதுமல்ல.
இவ்வரசு குறித்த தாக்குதல் தொடர்பில் விளக்கமளிக்க முற்படுகையில், குறித்த தாக்குதலுடன் தொடர்புடையவராக பேரின மக்கள், தங்கள் மனங்களில் பதித்து வைத்துள்ள பலரை " இவ்வாட்சியாளர்கள் தங்கள் வாய்களாலேயே நிரபராதியென " கூற வேண்டிய நிர்ப்பந்தம் எழும். தாங்கள் குற்றவாளியாக்கியவர்களையும் சேர்த்து. வேறு வழியில்லை. இனவாத விதைப்பாளர்களே இதனை கூறிவிட்டால், இனி என்ன, சிங்கள மக்கள் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றேயாக வேண்டும். இதுவே இதற்கு முற்றுப் புள்ளி வைக்க போதுமானதாக அமையும்.
கோத்தா வெற்றியீட்டாது இவ்வரசு தொடர்ந்திருந்தால், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாகவே தொடர்ந்திருப்பர். இவ்வரசு தங்கள் வாக்கு வங்கியை பாதுகாக்க, தங்கள் பங்காளிக் கட்சிகளின் ஆதரவை தக்க வைக்க குற்றவாளிகளை குற்றவாளியில்லை என கூறுகிறது என்றிருப்பர். இந்த அரசு அவ்வாறு கூறின் யாது செய்ய இயலும்? இருந்தாலும், இதனை எவ்வாறு இவ்வரசு கையாளப் போகிறதென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
இவ்வரசு முஸ்லிம்களின் ஆதரவின்றி அமைந்ததன் மூலம் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பல்வேறு வதந்திகளுக்கு கனமான முற்றுப்புள்ளி வைத்திடப் போகிறது. காரண, காரியங்களின்றி எதுவும் நடந்தேறுவதில்லை.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
Post a Comment