"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு வெளிநாடுகளுக்கோ அல்லது சர்வதேச அமைப்புகளுக்கோ ஒருபோதும் அடிபணியாது "என நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
"இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்த அரசு ஒருபோதும் ஏற்காது. அந்தத் தீர்மானம் குப்பையில் தூக்கி வீசப்படும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
"ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசு சர்வதேசத்துக்கு அடிபணிந்து செயற்பட்டது. இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு ரணில் அரசு இணை அனுசரணைகூட வழங்கியிருந்தது. அதனால்தான் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் அணியினருக்கு நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுத்து ராஜபக்ஷ ஆட்சியைக் கொண்டு வந்தார்கள்.
ராஜபக்ச அரசு வெளிநாடுகளுக்கோ அல்லது சர்வதேச அமைப்புகளுக்கோ ஒருபோதும் அடிபணியாது. நாட்டுக்கு எதிரான எந்தத் தீர்மானங்களையும் ஏற்காது.
ராஜபக்ச அரசின் இந்த நிலைப்பாடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மார்ச் மாத கூட்டத் தொடரில் எம்மால் தெரிவிக்கப்படும்.
இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் மத சக வாழ்வு அத்தியாவசியமாகும். இவை இல்லாமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அதனால் இன மற்றும் மத நல்லிணக்கத்தை நடைமுறையில் காட்ட வேண்டும். அதற்கு சிங்கள மக்களுடன் தமிழ், முஸ்லிம் மக்கள் கைகோர்த்து இந்த அரசுடன் இணைந்து பயணிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
Post a Comment