Top News

இஸ்லாம் அடிப்படைவாதம் தொடர்பாக அரசாங்கம் என்ன செய்துள்ளது, ஞானசார தேரர் கேள்வி ..!


சிங்களவர்களின் பிரச்சினை தொடர்பாக கதைத்தாலே தவறாக சித்தரிக்கிறார்கள். புதிதாக ஆட்சிபீடமேறிய அரசாங்கமும் சிங்களவர்களின் உரிமைக்காக பெரிதாக அக்கறை எடுப்பதாகத் தெரியவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் 14 செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தம் பேசிய அவர்,

“இஸ்லாம் அடிப்படைவாதம் தொடர்பாக அரசாங்கம் என்ன செய்துள்ளது? அரசியல் நோக்கமில்லாமல் எந்தவொரு அடிப்படைவாதமும் உருவாகாது.

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளின் நேரடி தொடர்பிலிருந்த அரசியல்வாதிகளின் பெயர்கள் வெளிவந்தும் ஏன், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அனைத்தையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஜனாதிபதி இவை தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் வில்பத்துவில் காடழிப்பு மேற்கொண்டபோது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்போது, மன்னார் நீதிமன்றுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அப்போதும் உரிய நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.

நாம் ஏதேனும் கருத்துக்கூறினால் எமக்கு 19 வருட சிறைத்தண்டனை வழங்குகிறார்கள். ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பாக 2013 ஆம் ஆண்டே நாம் கூறினோம். அனைத்து சாட்சிகளுடனும் நாம் அன்று குற்றம் சுமத்தியிருந்தோம். அப்போது எல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது எதிர்ப்பினை வெளியிடுகிறார்கள்.
அரசியல்வாதிகள் பிரச்சினையை உருவாக்குகிறார்களா அல்லது பிரச்சினையை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்கிறார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. இதனையெல்லாம் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
உண்மையில் இலங்கையில் சிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளது. சிங்களவர்களின் பிரச்சினை தொடர்பாக கதைத்தாலே தவறாக சித்தரிக்கிறார்கள். புதிதாக ஆட்சிபீடமேறிய அரசாங்கமும் சிங்களவர்களின் உரிமைக்காக பெரிதாக அக்கறை எடுப்பதாகத் தெரியவில்லை.

இவை உண்மையில் வேதனையை அளிக்கிறது. இன்னமும் அடிப்படைவாத செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

எனினும், அரசியல் நோக்கத்திற்காக அரசாங்கத்தரப்பினர் இதனைக் கண்டுகொள்வதில்லை. இது பாரிய ஆபத்தாகத்தான் முடியும்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post