அமுலிலுள்ள 1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் முஸ்லிம் சமூகத்துக்குப் பாதிப்பில்லாத வகையில் தீர்வு காணப்படும் என நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகள் நேற்று முன்தினம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தலைமையில் நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர். கலந்துரையாடலில் முஸ்லிம் சமூகத்தின் சமகால பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டன. இந்தக் கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் பாராளுமன்றத்தில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தை நீக்குவதற்காக முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழுவின் சிபாரிசுகள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் முன்னைய அமைச்சரவை யினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அந்தச் சிபாரிசுகளும் பாதிப்பற்ற வகையில் நிறைவேற்றப்படும் என்றார்.
இதேவேளை திடீர் மரணங்களுக்குள்ளாகும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் வைத்தியசாலைகளிலிருந்து விடுவிக்கப்படுவதில் நிலவும் காலதாமதம் குறித்தும் அமைச்சரிடம் தூதுக்குழுவினால் முறைப்பாடு செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனை நடாத்தப்படும் ஜனாஸாக்கள் உட்பட திடீர் மரணங்களுக்குள்ளானவர்களின் ஜனாஸாக்கள் 24 மணித்தியாலங்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என சுற்றுநிருபம் இருந்தாலும் ஜனாஸாக்கள் விடுவிப்பதில் தாமதங்களுக்கு தீர்வு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கொழும்பில் தற்போது 2 திடீர் மரண விசாரணை அதிகாரிகள் கடமையில் இருக்கும் நிலையில் மேலதிகமாக 2 திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
அத்தோடு அழைப்பின்போது கடமையில் ஈடுபடுவதற்கு மேலதிகமாக சட்ட வைத்திய அதிகாரியொருவரையும் நியமிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.
நாடெங்கும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 30 பிரதேசங்களில் திடீர் மரண விசாரணை அதிகாரி வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அப்பகுதிகளுக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களை திடீர் மரண விசாரணை அதிகாரிகளாக நியமிக்கும் படியும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் கோரிக்கை விடுத்ததுடன் வெற்றிடங்கள் தொடர்பான விபரங்களையும் அமைச்சரிடம் கையளித்தார்.
இக்கலந்துரையாடலில் உலமாக்கள், வை.எம்.எம்.ஏ. அமைப்பின் பிரதிநிதிகள், கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான், கொழும்பு முன்னாள் மேயர் ஒமர்காமில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன், வத்தளை மாபோலை நகர சபையின் முன்னாள் தலைவர் எம்.நெளசாத், கண்டி மாவட்ட பொதுஜன பெரமுன அமைப்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
Post a Comment