ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் பிரதிபலிப்புக்களை அடியொற்றி தொடர்ந்தும் பெரும்பான்மை வாதத்தினை முன்னிலைப்படுத்தி செயற்பட்டுக் கொண்டிருப்பதானது இனங்கள் மென்மேலும் துருவப்படுத்தப்படும் பேராபத்தையே தோற்றுவிக்கும் என்று தமிழ், முஸ்லிம் தரப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
நாட்டின் சுபீட்சத்தையும், எதிர்காலத்தினையும் கருத்திற்கொண்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் மனநிலையிலும் அவரது போக்கிலும் மாற்றங்கள் ஏற்படவேண்டியது அவசியம் என்றும் அத்தரப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஆற்றிய அக்கிராசன உரையின்போது, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாத அரசியலை முன்னெடுத்தவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களை என்றும் மதிக்க வேண்டும். அப்போது தான் மக்களின் இறையாண்மையை பாதுகாக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் ஒற்றை ஆட்சியை பாதுகாப்பேன் என்றும் பௌத்த சமயத்திற்கு முதன்மைத்தானத்தினை காப்பேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்விடயங்கள் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் ஆகியோர் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் கருத்துக்கள் வருமாறு,
சுமந்திரன் எம்.பி கூறுகையில்:
இனம் சார்ந்த கொள்கையுடன் செயற்பட்டு வரும் அரசியல் கட்சிகள் இந்த நாட்டில் பிரிவினையை தோற்றுவிக்கின்றன என்ற நிலைப்பாட்டினை ஜனாதிபதி தனது உரையில் வெளிப்படுத்துகின்றார்.
அத்துடன் இனம்சார்ந்து செயற்படும் அரசியல் கட்சிகள் ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தொனியுடன் அவர்களை தீவிரவாதிகளாகவும் சித்தரித்துள்ளார்.
இலங்கை பாரம்பரிய பல்லினக் குழுமங்களைக் கொண்ட நாடாகும். அவ்வாறான பன்மைத்துவ நாட்டில் தனக்கு வாக்களித்த பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையிலேயே அனைத்து இனக்குழுமங்களும் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினை எடுப்பது பொருத்தமானதொன்றல்ல.
இவ்வாறான நிலைப்பாடானது பேரினவாத சிந்தனையின் வெளிப்பாடாகவே இருக்கின்றது. ஆகவே அந்தக்கருத்தினை ஏற்றுக்கொள்ளமுடியாது. இத்தகைய நிலைப்பாடுகள் தொடருகின்ற போது இனங்களுக்கிடையிலான விரிசல்கள் மேலும் அதிகரித்துச் செல்லும் நிலைமையே ஏற்படும் என்பதை ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும் என்றார்.
ரவூப் ஹக்கீம் எம்.பி கூறுகையில்:
புதிய ஜனாதிபதி ஆட்சிப்பொறுப்பினை ஏற்ற நாள் முதல் தற்போது வரையில் பெரும்பான்மையின ஆதரவு என்ற மனநிலையிலேயே தான் அனைத்து விடயங்களையும் அணுகி வருகின்றார். ஆரம்பத்திலேயிருந்தான இந்த அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரியவில்லை.
ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் மக்களின் தீர்ப்பினை மதிக்க வேண்டியது அரசியல் தலைமையொன்றின் கடமையாகின்றது. அவ்வாறிருக்க அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் நிலைப்பாட்டினை ஒத்தவாறு, தனக்கு வாக்களிக்காதவர்கள் அனைவரும் தனக்கு எதிரானவர்கள் என்ற மனநிலையில் செயற்படுவது இந்த நாட்டிற்கு பொருத்தமற்றதொரு செயற்பாடாகும். மேலும் இந்த மனநிலைப்போக்கினை வரலாறு நிச்சயமாக பொய்ப்பிக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தனக்கு வாக்களிக்காத மக்களின் அபிலாஷைகளை உணர்ந்து அவர்களையும் தன்னுடன் அடுத்துவரும் காலத்தில் எவ்வாறு அரவணைத்துச் செல்வதென்பது பற்றி சிந்திக்கும் மனநிலை தற்போது வரையில் உருவாகது இருக்கின்றமையானது ஆரோக்கியமான விடயமொன்றல்ல. தேர்தல் வெற்றிக்குப் பின்னரும், இனம்சார்ந்து செயற்படும் அரசியல் தரப்புக்களை தீவிரவாதிகள் என்று முத்திரையிடுவது கவலைக்குரியவிடயமாகும்.
தமது இனம் சார்ந்து செயற்படும் சிறுபான்மை தேசிய இனங்கள் இனவாதக் தரப்புக்கள் என்றால் பெரும்பான்மை இனம்சார்ந்து செயற்படும் கட்சிகளை எவ்வாறு அழைப்பது என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. இத்தகைய போக்குகள் மக்கள் மத்தியில் பீதியான மனநிலையையே தோற்றுவிக்கின்றன.
ஆகவே ,ஜனநாயக முடிவுகளை ஏற்றுக்கொள்ளாது எதிராளிகள் என்ற போக்கிலும் மொழி, மதம், இனம் என அனைத்திலும் பெரும்பான்மைவாத எண்ணப்போக்கில் தலைவர்கள் பிரதிபலிக்கின்றமையானது பல்லினங்கள் வாழும் இந்த நாட்டில் அவற்றுக்கிடையில் மென்மேலும் துருவப்படுத்தல்களையே அதிகரிக்கச் செய்யும். அவ்வாறான நிலைமைகள் மோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார்.
ரிஷாத் பதியுதீன் எம்.பி கூறுகையில்:
முஸ்லிம்கள் என்றுமே வன்முறையை விரும்பியவர்கள் கிடையாது. பிரிவினையை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஐக்கிய இலங்கைக்குள் தலைநிமிர்ந்து வாழவே விரும்புகின்றார்கள். ஆகவே அவர்களின் விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்துவதற்கு சகல உரித்தும் அவர்களுக்கு உள்ளது. தமது ஜனநாயக கடமையில் அவர்களின் வெளிப்பாடுகளை நாட்டின் எதிர்காலம் பற்றிய கரிசனைகொண்டிருக்கும் ஜனாதிபதி தவறாக புரிந்துகொள்வதே தவறாகும்.
மேலும் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இனவாத அரசியலை கைவிடுமாறு தமது இனம் சார்ந்து செயற்படும் சிறுபான்மை தரப்புக்களை இலக்காக வைத்து கூறுகின்றார். ஆனால் பெரும்பான்மை தேசிய கட்சிகளின் வெளிப்பாடுகளையும் அவர் கவனத்தில் கொள்ள வேண்டியது கட்டாயமாகின்றது.
இந்த நாட்டினை பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் என்பதையே இலக்காக கொண்டிருப்பதாக கூறும் ஜனாதிபதி, அதற்கான அடிப்படைகளையே முதலில் மேற்கொள்ள வேண்டும். சிங்கப்பூர், மலேஷியா போன்ற பல்லின நாடுகள் அபிவிருத்தியில் மேலோங்கித் திகழ்வதற்கு அடிப்படையாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமே காணப்படுகின்றது. ஆகவே வாக்களிப்பினை மையப்படுத்திய மனநிலையில் செயற்படுவதானது இனங்களுக்கிடையில் மேலும் இடைவெளிகளையே ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
திகாம்பரம் எம்.பி கூறுகையில்:
உள்நாட்டுப்போரை வெற்றி கொண்ட அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சிறுபான்மை மக்களின் மனங்களை வெற்றி கொள்ள முடியவில்லை. இனங்களுக்கிடையில் ஐக்கியத்தினை கட்டியெழுப்ப முடிந்திருக்கவில்லை. இதன் காரணத்தினாலேயே அவருடைய ஆட்சி சரிந்தது.
இந்நிலையில் அவருடைய சகோதரராக இருக்கும் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவாவது சிறுபான்மை மக்களின் மனங்களை வெற்றி பெறுவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாறாக பெரும்பான்மையின சிந்தனையில் செயற்பட விழைவதானது இனங்களுக்கு இடையிலான விரிசல்களை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றார்.
Post a Comment