Top News

இருப்பதை இல்லாமலாக்கும் செயற்பாட்டுக்கு சமூகம் துணைபோகக் கூடாது!



-ஆதம்பாவா-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமது கட்சியை வெற்றியடையச் செய்யும் முயற்சிகளுக்குப் பலம் சேர்க்க, சிறுபான்மை மக்களின் ஆதரவை நாடியுள்ளார். அரசாங்கம் அமைப்பதற்கான சாதாரண பெரும்பான்மையைப் பெறமுடியாது என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. 69 இலட்சம் வாக்குகளால் வெற்றியீட்டிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் இம்முறை 105 அல்லது 108 ஆசனங்களையே பெறமுடியும். இந்த யதார்த்தத்தில் முஸ்லிம் வாக்குகளில் கண்வைத்துள்ள இந்தக் கட்சி, ஒவ்வொரு மாவட்டங்கள் தோறும், முஸ்லிம் தனவந்தர்கள், வர்த்தகர்களைக் களமிறக்கியுள்ளது. 

வெற்றி பெறமுடியாதெனத் தெரிந்தும் இவர்கள் இக் களத்துக்கு வந்துள்ளமை சமூக நோக்கிற்காகவல்ல. வியாபார இலட்சியங்களை அடைந்து கொள்வதற்காக அரசியல் போர்வையைப் போர்த்திக் கொண்டு வரும் இவர்களை, முஸ்லிம்கள் அடையாளம் காண்பது அவசியம். முஸ்லிம் தலைமைகளின் வாக்குகளைச் சூழ்ச்சியால் சூறையாடும் இந்த முஸ்லிம் தனவந்தர்களின் இச்செயற்பாடுகள், பாரம்பரிய முஸ்லிம்களுக்கு கிடைத்து வந்த ஆசனங்களை இல்லாமலாக்கும். மட்டுமன்றி அவர்களையும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகாமலே தடுக்கப்போகிறது. 

இத்துயரத்தைச் செய்த கைங்கர்யக்காரர்களுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வழங்கவுள்ள சன்மானங்கள், எம்மை அநாதைகளாக்கிய வெகுமதிகளாகவே இருக்கப் போகின்றன.

இவ்வாறு எமது சமூகத்துக்கு பாரிய துரோகமிழைக்கவுள்ள இந்த தற்காலிக வேட்பாளர்களுக்கு பரிசுகள் பாராட்டுக்களாக, கொமிஷன், கோடினேற்றர், கொந்தராத்துக்கள் என ஆசை காட்டப்படுள்ளது. எனவே, சொந்த வியாபாரத்தில் ஆதாயம் தேடும் இவர்களின் செயற்பாடுகளை நாம் அனுமதிக்க முடியாது. 

நாட்டில் இன்றுள்ள நிலைமைகளில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில், எந்த முஸ்லிம்களும் தெரிவாவதற்கு சந்தர்ப்பங்களில்லை. முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமையில் களமிறங்கவுள்ள கட்சி, வன்னி மாவட்ட த்தில் சுமார் 40,000 வாக்குகளை எடுக்கும் நிலையே தென்படுகிறது. இந்நிலையில், வன்னியில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு ஆசனத்தையும் வெல்ல முடியாது. அவ்வாறு வென்றாலும் முஸ்லிம் ஒருவர் தெரிவாவதற்கு வாய்ப்புக்களே இல்லை. 

விகிதாசாரத் தேர்தலின் விந்தைகளிலுள்ள வியப்புக்களை நன்கு புரிந்துகொண்டவர்களையே இக்கட்சி களமிறக்கி வருகிறது. எனவே, ஐந்நூறு வாக்குகள் குறைந்தாலும் ஒரு எம்பியை இழக்கும் அபாய நிலையை எமது சமூகம் புரிந்துகொள்ளல் அவசியம். தனிப்பட்ட முஸ்லிம் தனவந்தர்கள், வியாபாரிகளின் இந்தச் செயற்பாடுகள் இருப்பதையும் இல்லாமலாக்கும்.

Post a Comment

Previous Post Next Post