Top News

சோரம்போகும் சூழ்ச்சிக்குள் பேரம் பேசும் தனித்துவங்கள்!


-சுஐப் எம்.காசிம்-

பொதுத் தேர்தலை வெற்றிகொள்வதற்கான ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த நகர்வுகள் அரசாங்கத்தை அமைக்க உதவுமா? இல்லை தோற்கடிக்கப்பட்டு மேலும், மோதல்களை ஏற்படுத்துமா? ஆதரவாளர்களுக்கு இன்றுள்ள அச்சம்தான் இது.

பத்து வருட ஆட்சியைப் புரட்டிப் போட எடுத்த எத்தனங்களுக்கு "ஐந்து வருடங்களாவது ஆட்சியில் இருக்கவில்லையே!" என்ற விரக்தியால், இக்கட்சியின் ஆதரவாளர்கள் பலர் சோம்பேறிகளாகியும் உள்ளனர். இந்நிலையிலும் இவர்களுக்குள் மோதல்கள் இன்னும் முடிந்தபாடில்லை. இந்த இழுபறிகள் ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள தனித்துவ தலைவர்களுக்கு புதிய வியூகங்களை ஏற்படுத்துமா? அல்லது தனிவழி செல்லத் தூண்டுமா?

எதிர்க்கட்சித் தலைவராக சஜித்தும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக கருஜெயசூரியவும், ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக ரணிலும் செயற்பட்டு, வெற்றிக் கம்ப இலக்கை நோக்கி ஓட முடியுமா? மூவர் ஓடினாலும் ஒருவர்தானே வெற்றி பெறலாம். இந்த இலட்சணத்தில் நகரும் இக்கட்சியின் ஓடுபாதையில், ரஞ்சன் ராமநாயக்கவின் சீடிக்களும் (CD) முட்களை நிரப்பியுள்ளன. ஒரு காலத்தில், எதிர்க்கட்சியே இல்லாதளவுக்கு அரசாங்கம் நடத்திய ஐக்கிய தேசிய கட்சியின் இன்றைய நிலை, தொடர்ந்தும் எதிர்க்கட்சியிலே இருக்கச் செய்கிறது.

முன்னாள் ஜனாதிபதி அமரர் பிரேமதாஸவின் மறைவுக்குப் பின்னர் 27 வருடங்களாக, இந்தக் கட்சிக்கு ராஜயோகம் கிட்டவில்லை. கிட்டினாலும் அது முழுமையடையவுமில்லை. இருண்ட வானத்தை இடைக்கிடை வெண்கீற்று கிழிப்பது போன்று, 2002 முதல் 2004 வரை ஒரு அதிஷ்டம், 2015 முதல் 2019 வரை ஒரு யோகம். இந்த அதிஷ்டம், யோகங்களில் பிற கட்சிகளின் ஜனாதிபதிகளே அதிக இலாபம் பிடுங்கினர்.

இதற்கு ஒரு வழிகாண, பிரேமதாஸவின் புத்திரரை களத்தில் இறக்கியும் 'ஆற்றுக்குள் விழுந்த ஓநாய், நாக்கை நனைக்காத கதையாகிற்று'. ஒட்டுமொத்தத்தில் எதிரியோடு போட்டியிட்ட களைப்பு, உள்வீட்டு மோதல்களால் உண்டாகியுள்ள சலிப்பு, கைது, பிடியாணை என இக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் கெடுபிடிகள். இதுதான் இன்றைய ஐ.தே.க. இவற்றை இல்லாதொழிப்பதற்கு உள்ள ஒரே வழி பொதுத் தேர்தலில் வென்று, அரசாங்கத்தை அமைப்பதுதான். எப்படிச் சாத்தியம் இது?

தென்னிலங்கையின் கள நிலவரங்களுக்கேற்ப தீர்மானம் எடுக்க வேண்டும். "பௌத்த மதம், ஒன்றுபட்ட இலங்கை, பயங்கரவாதமில்லாத நாடு" என்ற கொள்கை வேண்டும். இங்குள்ள சிலரின் பொறுப்பில்லாத பேச்சு, போக்குகளை நிறுத்த வேண்டும். அபிவிருத்தி, தொழில் வாய்ப்புகளை பேச்சளவிலன்றி செயலுருவில் காட்ட வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இக்கட்சிக்கு இதற்கேற்ற தலைமை வேண்டும். எப்படிப் பெறுவது தலைமையை?

2024 வரைக்கும் ரணிலின் தலைமையை எதுவும் செய்ய இயலாது. அவராகப் பதவி துறந்தாலும் செயற்குழுவே அடுத்த தலைவரைத் தீர்மானிக்கும். சஜித்தை தலைவராக்கும் சக்தி ரணிலிடம் இல்லை. மேலும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக கருவை நியமிக்கும் அதிகாரம் ஐ.தே.க செயற்குழுவிடம் மட்டுமில்லாது, பங்காளிக் கட்சிகளின் முடிவிலும் தங்கியுள்ளது. இந்நிலையில்தான் இவற்றையும் தருமாறு கோரி சஜித் அடம்பிடிக்கிறார்.

சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவுள்ள வரைக்கும், பௌத்த பெரும்பான்மைக்கு எதிரான கூட்டணியாக, ஐக்கிய தேசிய கட்சி பார்க்கப்படுவதை, தென்னிலங்கையில் தவிர்க்கவே முடியாது. எனவே, தோழர்களைத் தூரப்படுத்தியாவது, தென்னிலங்கையில் வாக்குச் சமருக்குத் தயாரானால், ஐக்கிய தேசிய முன்னணி தலைவராவது எப்படி என்ற சிக்கலையும் எதிர்கொள்ள நேரிடும். யார் இதற்குத் தலைமை தாங்குவது?

மேலும், தங்களைத் தூரப்படுத்துவதற்கிடையில், தாமாகவே விலகி, தனிவழி சென்று பின்னர், பொது அணியில் வரவும் தனித்துவர்கள் சிந்திக்கின்றனர். இவ்வாறு செய்வது, பௌத்தர்களின் சந்தேகப் பார்வையை களைந்தெடுக்க ஐ.தே.கவுக்குச் செய்த உதவியாகவே இருக்கும். இங்குள்ள பிரச்சினை இதுவல்ல. எதற்காக இக்கட்சி தோற்கடிக்கப்படுகிறது? எதிரியின் பலத்தாலா? பலமில்லாத தலைமையாலா? உள்ளுக்குள் உள்ள குழிபறிப்பு, கழுத்தறுப்புக்களாலா?

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை அறிவிப்பதிலே இக்கட்சி ஒரு மாதத்தைக் கடத்தியதும், அறிவித்தும் சிலர் அசிரத்தையாகச் செயற்பட்டமையும் தோல்விக்குப் பங்களித்துள்ளன. எனவே, சிறுபான்மைக் கட்சிகள் மிகக் கவனமாகச் சிந்திப்பதிலேதான் சமூகத்தின் எதிர்காலமும், கட்சிகளின் அடையாளமும் காப்பாற்றப்படும்.

உயில் எழுதிக் கொடுத்தது போல, ஐக்கிய தேசிய கட்சியையே ஆதரிப்பதென்ற சில தலைமைகளின் நிலைப்பாடுகள், முரட்டுப் பிடிவாதங்களாக நோக்கப்படும் நிலவரங்கள் தோன்றி வருகின்றன. புலிகளால் பெற முடியாததை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தளராத பிடிவாதங்களால் சாதிக்கச் சாத்தியமற்றதை இனி எந்த அரசாங்கத்தில், எந்தத் தலைமைகள், எப்படிச் சாதிக்கும்? தமிழர்களின் ஒன்றுபட்ட, ஒட்டுமொத்த, ஏகபிரதிநிதியான தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், மற்றொரு சிறுபான்மைச் சமூகத்தின் வரலாற்றுத் தியாகங்களை மலினப்படுத்தும் இன்றைய வேதனைச் சூழலில், இன்னும் இன்னும் எமது தலைமைகள் தவறி விடாது, வழுக்கி விழாது செயற்படுமா?

ஜனாதிபதி ஒரு கட்சியிலும் அரசாங்கம் இன்னுமொரு கட்சியிலும் இருக்கும் கசப்பான அரசியல் சூழலுக்கு உழைக்கும் மன நிலையில், தனித்துவத் தலைமைகள் இன்னும் இருக்க வேண்டுமா? அவ்வாறு இருப்பதானால், கெட்டியான தலைமைத்துவமும் இழுபறி இல்லாத ஒற்றுமையும் ஐ தே கட்சிக்கு தேவை. அறுதிப்பெரும்பான்மை அரசை அமைக்கும் அளவுக்கு உழைக்க ஐக்கிய தேசிய கட்சிக்கு இன்றுள்ள அவசியமும் இதுதான். 'நீறுபூத்த நெருப்பாக' உள்வீட்டுப் பூசல்கள் நீடித்தால் வெற்றிக்குச் சாத்தியமே இல்லை. ‘எதுவும் நடக்கலாம்’ என்ற யதார்த்தத்தில் தனிவழி செல்வதுதான், தனித்துவ தலைமைகளுக்கு இன்றுள்ள ஒரேவழி. இவ்வழிகள் மாவட்ட வெற்றிகளை, எதிரணியினருக்கு சாதகமாக்கலாம். இந்தச் சாதகத்தில் சிறுபான்மைச் சமூகங்கள், சிலவற்றை சாதிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

மறு முனையில், முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளை பொதுஜன பெரமுன இலக்கு வைப்பது, அரசாங்கத்தை அமைப்பதற்காகவல்ல. மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறுவதற்கான பிரயத்தனங்களே இவை. இதைப் பெறாது போனால், தனித்துப் போட்டியிட்ட தனித்துவ தலைமைகள் பேரம் பேசும் சக்தியாகவும் மாற நேரிடும். அரசியலமைப்பு மாற்றத்திற்குத் தேவைப்படும், மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துக்கான தேவையிலே, சிறிய கட்சிகளின் ஆதuரவு பேரம் பேசும் சக்தியாகப் பரிணமிக்கும்.

Post a Comment

Previous Post Next Post