பொதுமக்களுக்கு சொந்தமான தோப்பூர் செல்வநகர் காணிகளை அரசு அபகரிக்க முயற்சி செய்வதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். குறித்த பகுதிக்கு செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
சுமார் எழுபது வருடங்களுக்கு மேலாக தோப்பூர் செல்வநகர் மக்களால் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் 525 ஏக்கர் விவசாய காணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் அடையாளமிடப்பட்டுள்ளன.
கடந்த சில வருடங்களுக்கு முன்பும் இந்தப் பகுதியிலுள்ள காணிகள் விகாரைக்குரிய காணிகளெனத் தெரிவித்து அபகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு எமது தலையீட்டால் அவை நிறுத்தப்பட்டிருந்தன.
இப்போது வனஜீவராசிகள் திணைக்களம் மூலம் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதால் இதற்குப் பின்னணியில் பாரிய இனவாத சக்திகளும் அவற்றின் நீண்டகாலத் திட்டங்களும் காணப்படுகின்றன என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.
எனவே, பொதுமக்களுக்கு சொந்தமான இந்தக் காணிகளை கைப்பற்ற இந்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒருபோதும் அனுமதியளிக்க முடியாதென அவர் தெரிவித்தார்.-
#Vidivelli