Top News

சாய்ந்தமருது வர்த்தமானியிலுள்ள பிரச்சினைகளை பாருங்கள் என்ற அதாவுல்லாஹ்வின் கூற்று என்ன சொல்கிறது?


சாய்ந்தமருது நகர சபை கோசம் இன்று, நேற்று தோற்றம் பெற்ற ஒன்றல்ல. மறைந்த மு.காவின் தலைவர் மர்ஹும் அஷ்ரப் காலத்திலேயே நிலவிய கோரிக்கை தான். அண்மையில் இடம்பெற்றிருந்த மு.காவின் கட்டாய உயர்பீட கூட்டத்தில் இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த மு.காவின் தலைவர் ஹக்கீம் " மறைந்த மு.காவின் தலைவர் அதனை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை " என கூறியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இப்படி இவ் விடயமானது அம் மக்களது மிக நீண்ட நாள் கோரிக்கையாக இருக்க, ஒவ்வொரு அரசியல் வாதியும் வாக்கு கொடுத்து, நிறைவேற்றாமல் செல்லும் நிலையையே அவதானிக்க முடிகிறது.




முஸ்லிம் அரசியல் தலைமைகளை பொறுத்தமட்டில் சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை வழங்க வேண்டுமென்பதில் உறுதியாகவே உள்ளனர். ஆனால், அது கல்முனை முஸ்லிம் மக்களை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் முழு கல்முனை மாநாகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசமும் நான்காக பிரிக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டில் உள்ளனர். இந்த நான்கு பிரிப்பு என்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. கல்முனை வாழ் தமிழ், முஸ்லிம் மக்களிடையே விட்டுக்கொடுப்புடனான உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே அது சாத்தியமாகும். யார் விட்டுக்கொடுப்பது..? இன்று விட்டுக்கொடுப்பு மருந்துக்கும் இல்லையல்லவா?




நான்காக பிரிப்பதானது சாத்தியமற்ற ஒன்று என்பதை உணர்ந்த சாய்ந்தமருது மக்கள், நான்காக பிரியுங்கள் அல்லது பிரிக்காமல் விடுங்கள், எல்லைகள் தெளிவாக உள்ள எங்களுக்கு முதலில் சபையை தாருங்கள் எனும் கோரிக்கையை முன் வைத்திருந்தனர். இந்த நான்கு பிரிப்பு தீர்வில் அதாவுல்லாஹ்வுக்கும் பிரதான பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை. கடந்த காலங்களில் இது பற்றிய முன்மொழிவுகளை ( proposals ) அவரும் முன் வைத்திருந்தார். சாய்ந்தமருதுக்கு மாத்திரமான தனியான பிரிப்பை பிழையானதாகவும் ஏற்றிருந்தார். இது தொடர்பில் அந் நேரத்தில் பகிரமங்கமாக கருத்து தெரிவித்துமிருந்தார்.




இவ்வாறான நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை வர்த்தமானிப்படுத்தப்பட்டிருந்தது. இவ் வர்த்தமானி வெளியீட்டுக்கு அதாவுல்லாஹ்வே பிரதான காரணமாகவும் கூறப்பட்டிருந்தது. அவரை தேசிய தலைவராக அறிவிக்கும் நிலைக்கு சாய்ந்தமருது மக்கள் சென்றுமிருந்தனர். இருந்தும், அவ் வர்த்தமானி வெளியீட்டில் எழுந்த இனவாதத்தால், அவ் வர்த்தமானியை தற்காலிகமாக இடை நிறுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஒரு வர்த்தமானியை இன்னுமொரு வர்த்தமானி வெளியீட்டாலேயே தடை செய்ய முடியும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.




கடந்த சனிக்கிழமை பாலமுனையில் பேசிய அதாவுல்லாஹ் சாய்ந்தமருக்கு தனியான நகர சபை வழங்குவதை பிழையாகவும், கெசட் வந்துவிட்டதா, நிப்பாட்டுபட்டுவிட்டதா என பார்க்காமல் அதிலுள்ள பிரச்சினைகளை பார்க்குமாறும், அதிலுள்ள இரகசியங்களை கூறமுடியாதெனவும் கூறியிருந்தார். அப்படியானால், பிரதமர் மஹிந்தவின் தலையீட்டால் வெளிவந்த வர்த்தமானி வெளியீட்டை பிழை என கூற வருகிறாரா?




இவர் 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபையை வர்த்தமானிப்படுத்த ஏற்பாடுகளை செய்திருந்தார். அவரது கூற்றுப் படி, இது வாக்கை மையப்படுத்திய சுயநல அரசியல் போக்கு. இதனை எப்போதே செய்திருக்கலாம். தேர்தல் காலப்பகுதியில் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. அது அன்று தேர்தலை மையப்படுத்திய செயற்பாடாக கருதி தேர்தல் ஆணையாளரால் இடை நிறுத்தப்பட்டிருந்தது. தடுக்கப்படும் என அறிந்து தான் செய்தாரோ தெரியவில்லை?




அண்மைய முயற்சியில் தனிச் சபைக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்த போதும் இனவாதத்தால் அதனை தற்காலிகமாக இடை நிறுத்த வேண்டிய நிலைக்கு மொட்டு அணியினர் தள்ளப்பட்டிருந்தனர். இதனை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவிலையென்றல்லவா சொல்ல வேண்டும். இப்போது கல்முனை முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட போவதாக பேசுகிறார். 2015 ம் ஆண்டு வர்த்தமானிப்படுத்த சிந்தித்த போது கல்முனை மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்களா? அதை விடுவோம், இப்போது வர்த்தமானிபடுத்தப்பட்டிருந்த போது ஏன் சொல்லவில்லை. இடை நிறுத்திய பிறகு தான் அதிலுள்ள பிரச்சினை விளங்கியதா? இது இயலாமையின் வெளிப்பாடு என்பதை துல்லியமாக்குகின்றது.




மேலுள்ளவாறு இவர் மீது ஆயிரம் விமர்சனங்களை முன் வைக்கலாம். இருந்தும் இதிலுள்ள முக்கிய விடயத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இவ் வர்த்தமானி தொடர்பில் ஒரு தீர்க்கமான தீர்மானம் மஹிந்த அணியினரால் எடுக்கப்பட்டிருந்தால், இது தான் தீர்மானமென அதாவுல்லாஹ் அன்று அடித்து கூறியிருப்பார். அவரால் உறுதியான எத் தீர்மானத்தையும் கூற முடியவில்லை. இவ்விடமானது இது தொடர்பில் இதுவரை மஹிந்த அணியினரால் உறுதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லையென்பதை துல்லியமாக்கின்றன. இனியென்ன, ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டுமல்லவா? இப்போது அவருக்கு கல்முனை மக்கள் பாதிக்கப்படுவார்களென்ற ஞானம் பிறந்துள்ளது.




மொட்டு, அதாவுல்லாஹ் அணியினருக்கிருந்த அரசியல் பசியை பயன்படுத்தி சாய்ந்தமருது மக்கள் தனியான சபையை பெறுவதற்கான வழியிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதுவே அண்மையில் நடந்தேறியவைகளும். இப்போது இனவாதம் மெலெழுந்துள்ளதால் அந் நிலை மாறியுள்ளது. சாய்ந்தமருதுக்கு சபை வழங்குவதால் ஏற்படும் அரசியல் இலாபத்தை விட, அதனை வழங்காமல் தவிர்ப்பதே மொட்டு அணியினருக்கு அதிக இழப்பை தவிர்க்கவல்லது. இதில் மூக்குடைந்து போனவர் அதாவுல்லாஹ். வாக்குமில்லை.. கொள்கையுமில்லை.. இனி இதனை சாதிப்பது அவ்வளவு இலகுவான விடயமுமல்ல.




தற்போது சாய்ந்தமருதுக்கு மாத்திரம் தனியான நகர சபையை வழங்குவது சுயநலம், அதில் சொல்ல முடியாதளவு பிரச்சினை உள்ளதாக அதாவுல்லாஹ் கூறியுள்ளார். ஏனைய அரசியல் கட்சி தலைவர்கள் சாய்ந்தமருதுக்கு நகர தருவோம் என கூறி ஏமாற்றானாலும், அதில் சொல்ல முடியாதளவு பிரச்சினையுள்ளதென ஒரு போதும் கூறியதில்லை. இவர் ஏனைய அரசியல் தலைவர்களையும் விட ஒரு படி மேல் சென்று சாய்ந்தமருது போராட்டத்தை கொச்சைபடுத்தியுள்ளார். தான் மூக்குடைபட்டதை மறைக்க வர்த்தமானி தடைப்பட்டதை நியாயப்படுத்தியாக வேண்டும். அதற்காக சாய்ந்தமருது போராட்டத்தை மழுங்கடிக்கவல்ல கருத்துக்களை கூற முடியுமா. உதவி செய்யாது போனாலும் உபத்திரம் செய்யாமல் இருக்க வேண்டுமல்லவா?




இனியும் சாய்ந்தமருது பள்ளிவாயல் நிர்வாகம் இவரை ஏற்குமாக இருந்தால், அவர்கள் சபை பெறும் முயற்சியிலிருந்து திரும்பி வேறு பக்கம் சென்றுவிட்டதையே வெளிப்படுத்தும்.




துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,

சம்மாந்துறை.

Post a Comment

Previous Post Next Post