Top News

வன்னி அரசியல் களம்.



வன்னியில் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அடைந்து கொள்வதற்காக பகடைக்காயாய் பயன்படுத்தப்படும் முஸ்லிம் வேட்பாளர்கள்!

வரலாற்றில் என்றுமில்லாதவாறு வழமைக்கு மாறாக வன்னி அரசியல் களம்  மற்றைய தேர்தல் மாவட்டங்களை முந்திக் கொண்டு தேர்தல் உஷ்ணத்தை உணரத் தொடங்கிவிட்டது.

ஆளும்கட்சிக்கு (மொட்டுக் கட்சி) கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ள வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் வேட்பாளர்கள் பலர் தயாராகி வருகின்றனர். அதற்காக பல மில்லியன்களை பலர் ஏற்கனவே செலவு செய்யவும் திட்டங்களையும் தீட்டவும் தொடங்கி விட்டனர். மூவின மக்களையும் கொண்டிருக்கும் இந்தத் தேர்தல் மாவட்டத்தில் ஏறத்தாள 20,000 க்கும் சற்று அதிகமான பதியப்பட்ட பெரும்பான்மை வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு எப்படி யாவது ஒரு பெரும்பான்மை வேட்பாளரை இம்முறை வெல்ல வைப்பது என்பது ஆளும் கட்சியைப் பொறுத்த வரை காலத்தின் தேவையாக இருக்கின்றது.

வடக்கில் உள்ள இரண்டு தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் ஒரு பெரும்பான்மை பா.ம. உறுப்பினரும் இல்லாதிருப்பது பெரும்பான்மை மக்களுக்கு (குறிப்பாக இன வாதிகளுக்கு) ஒரு மிகப்பெரிய அரசியல் குறைபாடாகவே உள்ளது. வடக்கும் எம்முடையதே என நிருபிக்கவும்,  திட்டமிட்ட பெரும்பான்மை மக்களின் குடியேற்றங்களை தொடரவும் அதன் மூலம் குடித்தொகைப் பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்தவும் இந்த மாவட்டத்தில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள குடியேற்றத் திட்டங்களை வலுப்படுத்தவும் இந்த மாவட்டத்தில் ஏற்கனவே அதிகாரத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியலை பலவீனப்படுத்தவும் என பல்நோக்கு அரசியல் காய்நகர்த்தலாகவே இந்தப் புதிய பெரும்பான்மை அரசியலை வன்னியிலே பார்க்க வேண்டியுள்ளது. அவர்களது அடிப்படை நோக்கம் எதுவாக இருந்தாலும்  ஜனநாயக அடிப்படையில் அதனை விமர்சனம் செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது என்பதனையும் நாம் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிற ஒரு ஆசனத்தை தனியே பெரும்பான்மை வாக்குகளை மட்டும் வைத்து பெற்றுக் கொள்ள முடியாது என்பதனால் தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்குகளையும் சேகரிக்கும் பணியில் கட்சி இறங்கியுள்ளமை தெளிவாகத் தெரிகிறது. சில வாக்குறுதிகள், நம்பிக்கையான உறுதிமொழிகள் மூலம் இந்த தமிழ் முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட இருக்கின்றனர். இதற்காக தமிழ் முஸ்லிம் மக்களிடையே செல்வாக்கைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற கல்விமான்கள்,  அரசியல் வாதிகள் மற்றும் பணக்காரர்களை தேடும் பணியில் ஆளும்கட்சி இறங்கியுள்ளது. என்ன விலை கொடுத்தேனும் ஒரு பெரும்பான்மை பா.ம. ஆசனத்தை வன்னியில் பெறத்துடிக்கும் ஆளும் கட்சி பிரதானமாக இலக்கு வைப்பது பெரும்பான்மை வாக்குகளையேயாகும்.  பௌத்த மத ஸ்தலங்களையும் மதகுருமாரையும் பயன்படுத்தி இந்த இலக்கை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வன்னியில் ஒரு பெரும்பான்மை பா.ம.உறுப்பினரின் முக்கியத்துவம் பற்றிய உண்மைகள் பெரும்பான்மை வாக்காளர்களுக்கு தெளிவு படுத்தப்படும். இந்த இலக்கை அடைந்து கொள்ள தேவையான மேலதிக வாக்குகளை பெறுவதற்காகவே தமிழ் முஸ்லிம் வேட்பாளர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்பதில் எதுவித மாற்றுக் கருத்துக்களும் இல்லை.

இருந்த போதிலும் வன்னியில் களமிறக்கப்பட இருக்கின்ற பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த இரு வேட்பாளர்களும் தமிழ் முஸ்லிம் பணக்கார வேட்பாளர்களின் பணத்திற்கு முன்னால் ஈடுகொடுக்க முடியாமல் தோற்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் இன்று பெரும்பான்மை சமுகத்தைச் சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரை வெளிமாவட்டமொன்றில் இருந்து வன்னித் தேர்தலில் ஆளும்கட்சி சார்பாக களமிறக்க சகல முஸ்தீபுகளும் செய்யப்பட்டு விட்டதாக செய்திகள் ஏற்கனவே பரவிவிட்டன.  இதில் சந்தேகம் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.  காரணம் ஒரு தமிழ் அல்லது முஸ்லிம் வேட்பாளரை இந்த மாவட்டத்தில் வெல்ல வைக்க வேண்டிய அவசியம் ஆளும்கட்சிக்கு ஒரு போதும் இல்லை. அதற்கான நியாயப்படுத்தலும் இல்லை. அங்கு இருக்கின்ற பெரும்பான்மை   வெற்றிடத்தை நிரப்புவதென்பது அவர்களைப் பொறுத்த வரையில் மிகவும் முக்கியமானது.  இதன் ஆரம்பமாகவே வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக வழமைக்கு மாறாக பா.ம. உறுப்பினர் அல்லாத பெரும்பான்மை சமுகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  அவரும் இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் எனவே எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுள் பெரும்பான்மை சமுகத்தைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய தனவந்தர் ஒருவரே வெல்ல முடியும் என ஆளும் கட்சியினர் உறுதியாக நம்புகின்றனர்.  இதனாலேயே வெளிமாவட்டமொன்றில் இருந்து வேட்பாளர் இறக்குமதி நடைபெறவுள்ளது.

ஆளும்கட்சி சார்பாக வெல்ல இருக்கும் வேட்பாளர் குறைந்த பட்ஷம் 15,000 க்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளை பெற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  காரணம் இம்முறை 80%க்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகள் ஆளும்கட்சிக்கு அளிக்கப்படும் என கணக்கிடப்படுகிறது. அதே வேளை கட்சி தனிக்கட்சியாக நின்று வெற்றி பெற 25 000 க்கும் அதிகமான வாக்குகளை மாவட்டத்தில்  பெற வேண்டும். 15 000 விருப்பு வாக்குகளை ஒரு பெரும்பான்மை வேட்பாளரால் பெற முடியும். ஆனால் கட்சி வெற்றி பெற தேவையான வாக்குகளை பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் மாத்திரம் பெறமுடியாமல் போகலாம்.  இங்கு தான் தமிழ் முஸ்லிம் வாக்குகளின் தேவை அவர்களுக்கு இருக்கின்றது.

எனவே இந்தத் தேர்தலில் தமிழ் முஸ்லிம் வேட்பாளர்களை தமது இலக்கினை அடைந்து கொள்ள பயன்படுத்த முயற்சிக்கும் ஆளும் கட்சியின் அரசியல் இராஜ தந்திரம் பலிக்குமா அல்லது அதனை தோற்கடித்து 15 000 க்கும் மேற்பட்ட விருப்ப வாக்குகளைப் பெற்று யாராவது ஒரு தமிழ் அல்லது முஸ்லிம் வேட்பாளர் வெற்றிவாகை சூடுவார்களா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  அரசியலில் எதுவும் நடக்கலாம்.  நிட்ஷயமான எதிர்வுகூறல்களுக்கு எங்குமே இடமில்லை.  காரணம் இது மனித மனங்களுடனும் செயற்பாடுகளுடனும் சம்மந்தப்பட்டது......

எது எப்படியோ பல கோடிகளை பலர் செலவு செய்தாலும் வெல்லப் போவது ஒருவர் தான். அது யார் என்பதே இங்குள்ள கேள்வி....இறக்குமதி குதிரையை விட உள்ளுர் குதிரையொன்று (சிங்கள, தமிழ் அல்லது முஸ்லிம்) வெல்வதே வன்னி மாவட்ட மக்களால் அதிகம் விரும்பப்படும் செயலாகும்.

வாழ்க ஜனநாயகம்......

Post a Comment

Previous Post Next Post