Top News

சாய்ந்தமருது விவகாரம் பகிரங்கப்படுத்த முடியாத சூழ்நிலை - அதாவுல்லா


சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்கும் விடயத்தில் தனக்கு அரசியல் நோக்கம் இருந்திருந்தால் அல்லது அம்மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருந்திருந்தால் அகப்பையும், கத்தியும் என்னிடமிருந்த போதே அதனைச் செய்திருப்பேன். 

அவ்வாறான குறுகிய நோக்கம் ஒருபோதும் தன்னிடம் இருந்ததில்லை என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார். பாலமுனை அல்-அறபா விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட மின்னொளி மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்கும் விடயத்தில் தனக்கு அரசியல் இலாப நோக்கம் இருந்திருந்தால் அல்லது அம்மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கம் இருந்திருந்தால் என்னிடம் அரசியல் அதிகாரம் இருந்த போது அதனைச் செய்திருப்பேன். அவ்வாறான குறுகிய எண்ணம் ஒருபோதும் என்னிடம் இருந்ததில்லை.

கல்முனையில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அதை தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கலந்து பேசி அவர்களாகவே ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதை இணக்கமாக முடிக்க வேண்டுமாக இருந்தால் ஒரு ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும். நீதி, நியாயங்கள் எல்லாம் மதவாதிகளினாலும் இனவாதிகளினாலும் மழுங்கடிக்கப்பட்டுவிட்டது.

வர்த்தமானி அறிவித்தல் வந்துவிட்டதா? அல்லது நின்றுவிட்டதா? என்ற பார்வையில் மட்டுமே சிலர் இருக்கிறார்கள். ஆனால் அதனுள் புதைந்து கிடக்கும் பிரச்சினைகளை வெளியிட முடியாமலும், இரகசியங்களை பகிரங்கமாக கூற முடியாமலும் இருக்கின்றோம் என்றார்.

Post a Comment

Previous Post Next Post