Top News

சர்வதேச அணிகள் பாகிஸ்­தானுக்கு செல்வதை தாம் விரும்புவதாக குமார் சங்­கக்கார கூறுகிறார்


பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயம் செய்வதை சர்வதேச கிரிக்கெட் அணிகள் சீர்தூக்கிப் பார்ப்பதை நாங்கள் பெரிதும் விரும்புகின்றோம் என மார்­லிபோர்ன் கிரிக்கெட் கழகத் தலை­வரும் எம்.சி.சி. அணித் தலைவரு­மான குமார் சங்கக்கார தெரிவித்­துள்ளார்.

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயம் செய்து ஓர் ஓருநாள் கிரிக்கெட் போட்டியிலும் 3 இரு­பது 20 போட்டியிலும் விளையா­டிய பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் வெளியி­டப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் சங்­கக்கார மேற்கண்டவாறு கூறிய­தாக குறிப்பிடப்பட்டுள்ளது. ‘விசேட கிரிக்கெட் விஜயம் செய்த வீரர்கள் அனைவரும் பாகிஸ்தானில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஈர்க்­கப்பட்டுள்ளனர்.

அங்கு சர்வதேச கிரிக்கெட் வாசனை அரிதாகக் காணப்படுகின்­றபோதிலும் பாகிஸ்தானுக்கு அது பெரிய விடயமாக அமைய­வில்லை’ என்று குமார் சங்கக்கார கூறியதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் விளையாடப்பட்ட கிரிக்கெட் போட்டிகளை எப்­போதும் நினைவில் வைத்தி­ருக்கும் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவின் தலைமையிலான எம்.சி.சி. அணி­யினருக்கு வழங்கப்பட்ட மிக உயரிய வரவேற்பினால் அவர்கள் பிரமித்துப்­போனார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்­ளது.

‘லாகூரில் குவாலண்டர்ஸ் அணி­யுடன் முதலாவதாக நடைபெற்ற போட்டியில் நாங்கள் பெரிய அளவு இரசிகர்களை எதிர்பார்க்கவில்லை. நாங்கள் மைதானத்தை அடைத்த­போது அங்கு ஏற்கனவே 19,000 இரசி­கர்கள் குழுமியிருந்தனர். அவர்கள் கிரிக்கெட் விளையாட்டை கண்டுக­ளிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

இங்கு வருகை தருவது குறித்து அணிகள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என நாங்கள் விரும்பு­கின்றோம். அதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் பாகிஸ்தானுக்கு முழு அளவில் திரும்பக்கூடிய­தாக இருக்கும்’ என குமார் சங்கக்­கார தெரிவித்ததாக அந்த அறிக்­கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஒரு வாரம் பாகிஸ்தானில் தங்கியி­ருந்த எம்.சி.சி. அணியினர் திறந்த முச்சக்கர வண்டிகளில் பவனியாக அழைத்துச் செல்லப்பட்டதுடன் லாகூர் ஜிம்கானா கோல்வ் கழகம், லாகூர் கோட்டை ஆகியவற்றுக்கும் சென்றிருந்தனர். லாகூரில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் அவர்களுக்கு இரவு விருந்துபசாரமும் வழங்கப்பட்டிருந்தது.

Post a Comment

Previous Post Next Post