எம்.எஸ்.பாரிக் –
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், முஸ்லிம் தலைமைகள் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள், சமூகத்தலைமைகளின் செயற்பாடுகளுக்கு கடிவாளமிடும் முயற்சிகளாகி வருகின்றன. இதிலும் குறிப்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை சில இனவாத ஊடகங்கள் நச்சரித்தும் எச்சரித்தும் வந்தாலும், தலைமைக்கான அங்கீகாரத்தை தலைவர் ரிஷாட் பதியுதீன் இழக்கவில்லை. வடபுல முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல எதிர்காலத்தில் முழு முஸ்லிம் சமூகத்துக்கும் தோள்கொடுக்கும் அவரது திராணி, தைரியத்தை எந்தச் சக்திகளாலும் மழுங்கடிக்க முடியாது.
நம்பிக்கையாகக் கொண்டுவந்த நல்லாட்சியிலும் சரி, நயவஞ்சகம் செய்த குடும்ப ஆட்சியிலும் சரி, பற்றி எரிந்த, எரிக்கப்பட்ட எமது சமூகச் சொத்துக்களைக் காப்பாற்றக் களத்தில் நின்றது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தான். கண்டியை கொளுத்தியபோதும், பேருவளையை எரித்தபோதும் இந்தத் தலைமகன், சிங்களத் தலைமைகளின் நளினப் பேச்சுக்களுக்கு மசியவில்லை. பேருவளை சம்பவத்திற்காக ஆட்சியையே புரட்டிப்போட்ட இந்த ரிஷாட் பதியுதீன், கண்டி, அம்பாரை, மினுவாங்கொடை பகுதிகளில் கட்டவிழ்க்கப்பட்ட காடைத்தனங்களுக்கும் துணிந்து குரல் கொடுத்தவர்.
ஒருசில கொடிய இளைஞர்களின் செயலுக்காக, முழு முஸ்லிம்களுக்குமே பயங்கரவாத முத்திரை குத்தமுனைந்த மதவாதிகள், பேரினவாதிகளை எதிர்த்து, அமைச்சுக்களைத் துறந்த எமது தலைவர், சமுதாயத்திற்கு ஏற்படவிருந்த கேட்டை இல்லாமல் செய்தார். இன்னும் சிலர் ஏற்படுத்த முயற்சிக்கும் தீய சூழ்ச்சிகளையும் அவர் வௌிச்சத்திற்கு கொண்டு வருகிறார். இவ்வாறான தலைமை “தலையெடுக்கக் கூடாது” என்பதற்காகவே, ரிஷாட் பதியுதீனை பேரினவாதிகள் வளைத்து முகாமிடுகின்றனர். இதற்காகவே அவரையும் அவரது குடும்பத்தையும், உளைச்சலுக்குள்ளாக்கவும் தோற்கடிக்கவும் சிலர் களமிறக்கப்படுகின்றனர்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ரிஷாட் பதியுதீனின் இருப்பை வறிதாக்கி, அவ்விடத்திற்கு சில வியாபாரிகளைக் கொண்டுவரும் இனவாதிகளின் தந்திரங்களைத் தோற்கடிக்க, எமது சமூகம் இன்றே தயாராகிவிட்டது. விரட்டப்பட்ட சமூகத்திற்கு வாழ்விடங்கள் வழங்கியது தவறா? அவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கியது தவறா? மீளக்குடியேற்றுவது, வீடுகளை நிர்மாணிப்பது என்பவை எந்தவகையில் தவறாகும்? தரிசாகக்கிடக்கும் நிலங்கள், அரச காடுகள் ஏக்கர் கணக்கில் அழிக்கப்பட்டு, அபிவிருத்திகள், வீதிகள், வீட்டுத்தொகுதிகளை அரசாங்கம் நிர்மாணித்து வருகிறது.
இந்நிலையில் பயங்கரவாதத்தால் வௌியெற்றப்பட்டு, முப்பது வருடங்களாக வெறிச்சோடிக் கிடந்ததால் வனாந்தரமான சொந்த நிலங்கைளத் துப்புரவுசெய்து வீடுகள் அமைத்தால், வீதிகளை நிர்மாணித்தால், மீளக்குடியேற்றினால் எமது தலைவரை மாத்திரம் ஏன் இவர்கள் வஞ்சிக்கின்றனர்? மக்களின் தேவைக்காகத் தேர்ந்தெடுக்கப்படுபவன் பொதுத்தொண்டு புரியாமல், தனித்தொண்டா செய்வது? இதுதான் இன்றும் என்றும் தலைவர் ரிஷாட் பதியுதீனின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தப் போகிறது.
Post a Comment