ஒரு முஸ்லிமுக்கு இறைவனின் மாளிகையை விட புனிதமான இடம் வேறெங்கும் இருக்க முடியாது. இதனை யாரும் மறுக்க முடியாது. மறுப்பவன் முஸ்லிமாக இருக்க முடியாது. கோத்தா ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் அழித்தொழிக்கப்படுவார்கள் என்ற கதையாடல்கள் இருந்தன. இன்று முஸ்லிம்கள் மீது நேரடிக் கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்படாத போதிலும், அதனை விடவும் பாரதூரமான செயல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. அது தான் பள்ளிவாயலுக்குள் சிலைகள் குடியேறிக்கொண்டிருக்கின்றன. இதனை எந்த முஸ்லிமும் ஏற்க முடியாது.
கடந்த ஐ.தே.க ஆட்சியில் தான் இந்த பள்ளிவாயல் மூடப்பட்டுள்ளது. நாம் இதனை மறுப்பதற்கில்லை. ஜும்ஆ நடைபெற்ற பள்ளிவாயலொன்றை மூடுவது சிறிதும் ஏற்க இயலாத காரியம். இந்த சிலை வைப்பிற்கான அடித்தளம் கடந்த ஆட்சியில் அப் பள்ளிவாயல் மூடப்பட்டமையால் இடப்பட்டுள்ளது என்பதையும் மறுப்பற்கில்லை. அதற்காக மூடிய பள்ளிக்குள் சிலையை வைக்க இயலுமா? அதனை ஏற்க முடியுமா?
ஒரு பிழை நிகழ்கின்ற போது, அதனை கையால் தடுக்க இயன்றவர் கையாலும், வாயால் தடுக்க இயலுமானவர் வாயாலும் தடுக்க வேண்டும். இவ்விரண்டுக்கும் இயலாதவர் அதனை மனதால் வெறுக்க வேண்டும். இதுவே இஸ்லாமிய வழிகாட்டல். இன்று இதனை கையால் தடுக்க முயல்வது எமக்கு பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தவல்லது. இது வாயால் கண்டித்து அழுத்தம் வழங்க முடியுமான விடயம். முஸ்லிம் கட்சி தலைவர்களான ஹக்கீம், றிஷாத் ஆகியோர் இதனை கண்டித்துள்ளனர். ஏன் அதாவுல்லாஹ்வால் கண்டிக்க இயலாத போனது?
இவர்கள் இன்று மட்டுமல்ல, அன்றும் மாயக்கல்லியில் சிலை வைத்தது உட்பட பல விடயங்களுக்காக குரல் கொடுத்தவர்கள் தான். சாதித்தார்களா, இல்லையா என்பதற்கு அப்பால் குரலாவாது கொடுத்தார்கள் அல்லவா? தங்களது கட்சியை தாங்களே விமர்சித்தார்களல்லவா? ஏன் அதைக் கூட அதாவுல்லாஹ்வால் செய்ய இயலாமல் போனது? அவர்கள் சாதித்தார்கள் என்பதற்கு அப்பால், இஸ்லாம் பிழையை தடுப்பதற்காக கூறிய ஒரு விடயத்தையையாவாது செய்தார்களல்லவா? ஏன் இன்று அதாவுல்லாஹ்வால் குரல் கொடுக்க முடியவில்லை? அல்லாஹ்வின் மாளிகையில் நடந்த இவ்வாறான விடயத்தையே கண்டிக்க இயலாதவர், எதனை கண்டிக்கப் போகிறார்.
இன்று இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியவர் அதாவுல்லாஹ்வே. இன்று ஆட்சியமைத்துள்ளது அவருடைய கட்சியே. இப்படி நாம் கூறினால், நீங்கள் அவருக்கு வாக்களிக்கவில்லையே என கூற சிலர் வருவார்கள். இவ்வாறானவற்றுக்கு குரல் கொடுத்தால் தானே, இவரை ஏற்று வாக்களிக்க முடியும். அன்று மாயக்கல்லி மலையில் சிலை வைத்ததுக்கு எதிராக எதிர்க்கட்சியில் இருந்து குரல் கொடுக்க முடியுமாக இருந்தால், இன்று ஏன் முடியாது. தன் அரசியல் இருப்புக்கு சாதகமான சாய்ந்தமருதுக்கு ஆள் கூட்டி ஊடகவியலாளர் மாநாடு நடத்த முடிந்த அதாவுல்லாஹ்வால், ஏன் இதற்கு ஓர் வார்த்தையேனும் பேச முடியவில்லை. கடந்த காலங்களில் சாய்ந்தமருது மக்கள் இவருக்கு வாக்களிக்கவில்லையே! தன் அரசியலுக்கு இலாபம் என்பற்காக எதனையும் செய்ய முடியும். அதற்காக இறை இல்லத்தில் சிலை வைப்பதையும் ஏற்க இயலுமா?
அதாவுல்லாஹ் கதையில் கில்லாடி. இன்று மீம்ஸ் கிறியேட்டர்களின் வாய்க்குள் நாளாந்தம் அவலை போட்டிக்கொண்டிருக்கின்றார். இந்த நக்கல், நையாண்டி கதைத்தேது பயன். எங்கு கதைக்க வேண்டுமோ, அங்கு மௌனித்துள்ளார். அமேரிக்காவுக்கு எதிராக கதைத்துள்ள அதாவுல்லாஹ்வால், மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்ட சிலைக்கு எதிராக எதிர்க்கட்சியில் இருந்து போராடிய அதாவுல்லாஹ்வால், இன்று மஹற சிலைக்கு எதிராக கிஞ்சித்தேனும் பேச முடியவில்லை. ஏதும் பேசினால் தூக்கி வீசப்படுவார். தனது கட்சிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்களே என்ற அச்சம். இதுவே இன்று மொட்டு கட்சிக்குளுள்ள ஜனநாயகம். மொட்டு கட்சியினரின் நிலைப்பாடு. இதனை புரிந்துகொள்ள மறுக்கும் சமூகமாக இருக்க முடியாது.
எதிர்வரும் தேர்தலில் ஆளுங்கட்சியினரேயென இவ்வாறானவர்களை பதவி, பட்டங்களுக்காக ஆதரித்து முஸ்லிம் சமூகத்தை புதை குழிக்குள் தள்ளி விடாதீர்கள். ஏற்கனவே, நெலுந்தெனிய உடுகும்புறவில் பள்ளிக் காணிக்குள் சிலை வைத்து அதனை அவர்களுக்கு சொந்தமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
Post a Comment