கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பவர்கள் தயவுசெய்து மறைந்திருக்காமல் மருத்துவ பரிசோதனைகளைப் பெற்றுக்கொள்ள வெளியே வரும்படி கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று ஏற்பட்டும் மருத்துவ பரிசோதனைகளை செய்யாமல் சிலர் வீடுகளில் ஒளிந்திருப்பதால் அவர்களைக் கைது செய்ய ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே கர்தினால் ரஞ்ஜித் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, தொற்று ஏற்பட்டதாக அறிந்தும் யாராவது ஒளிந்திருந்தால் தயவு செய்து வைத்தியசாலைகளில் அனுமதி பெறுமாறு கோரினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நேரடியாக எமது நாட்டிற்கு இந்த வைரஸ் பரவுவதற்கு எந்த சாத்தியமும் இருக்கவில்லை. இந்த நாட்டிற்குள் பிரவேசித்தவர்களின் ஊடாகவே இது பரவியிருக்கலாம்.
அந்த வைரஸ் இருந்தவர்கள் ஏனையவர்களுடன் பழகியதை அடுத்தே நாட்டிற்குள் இது தீவிரமாக பரவியது. எனவே தனித்தனியாக நாங்கள் வாழ்வதற்குப் பழகிக்கொண்டு இருப்பவர்களையும் காப்பாற்றிக் கொண்டு இந்த வைரஸ் மேலும் பரவாமலிருப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்த தொற்று ஏற்பட்டவர்கள் தயவுசெய்து மறைந்து ஒளிந்திருக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் மேலும் பலருக்கு இந்த வைரஸ் பரவலாம். தைரியமாக இருங்கள். தொற்று ஏற்பட்டதாகத் தெரியவந்தால் அதனை அறிவியுங்கள்.
உங்களுடைய ஆள் அடையாளத்தைத் தெரியப்படுத்துங்கள். குணமாக்கும் அந்த மருத்துவ செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment