நாட்டிற்கு நல்லாட்சியை வழங்க ரணிலும் சஜித்தும் ஒன்றுபட அழைப்பு விடுக்கின்றோம் என முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுர்தீன் தெரிவித்தார்.
வவுனியா அருந்ததி மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவில் கூடி முடிவெடுத்ததன் பிரகாரம் அனைத்து இனத்தவரையும் பிரதிபலிக்கின்ற பல கட்சிகள் ஒன்று சேர்ந்து ஐக்கிய மக்கள் முன்னணி என்ற பெரும் சக்தியாக இந்த தேர்தலில் போட்டியிட இருக்கின்றோம்.
இன மத பிரிவினை அற்ற அனைவரும் ஒற்றுமையாக வாழும் சூழலை ஏற்படுத்துவது எமது எதிர்பார்ப்பாகும். அந்தவகையில் ஐக்கியதேசியக்கட்சி இரண்டாகப் பிளவுபட்டு நிற்பதென்பது அவர்களது கட்சி ஆதரவாளர்களுக்குச் செய்யும் அநியாயமாகும்.
எனவே இந்நிலையில் இருசாராரும் ஒன்றுபட்டு ஐக்கிய தேசியக்கட்சியின் மத்தியக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் சஜித் பிரேமதாசா தலைமையிலான கூட்டமைப்பிலே கலந்து கொள்வதுதான் சாலச்சிறந்ததாக இருக்கும். அதனூடாகத்தான் அதிக ஆசனங்களைப் பெறமுடியும்.
அதனூடாகவே ஆட்சி அமைக்க முடியும். எனவே அவ்வாறு நல்ல சூழல் இருக்கின்ற போது அதனை விடுத்துப் பிரிந்துநின்று கேட்டு வாக்கைச் சிதறடிப்பதானது அவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கும் நாட்டிற்கும் செய்யும் அநியாயமாகும்.
ஆகவே இந்நிலையில் நாட்டிற்கு நல்லாட்சியைத் தரக்கூடிய வகையில் ஒன்றுபட்டுச் செயற்படக்கூடிய நிலையை உருவாக்குவதற்காக நாம் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் அதன் தலைவரான ரணிலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்திற்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
இதேவேளை கொரொனோ வைரஸ் தாக்கத்தால் பொருளாதாரம் முற்றாகச் செயலிழந்து நிற்கின்றது. அந்தவகையில் எமது நாட்டிலும் அதன் தாக்கம் பெரியளவில் தாக்கம் செலுத்தி வருகின்றது. இந்த நிலையில் ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தினை கூட்ட வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேவேளை அனைத்துக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்துக்கட்சியையும் உடனடியாக கூட்டி இந்த பிரச்சினையைக் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒற்றுமையாக இருந்து எவ்வாறு முகம்கொடுக்கலாம் எவ்வாறு நாட்டு மக்களைக் காப்பாற்றலாம் மற்றும் பொருளாதார அழிவிலிருந்து நாட்டை எவ்வாறு மீட்கலாம் என்பது தொடர்பாகக் கலந்துரையாட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
Post a Comment