அபு ஹின்சா
எக்காரணம் கொண்டும் கெரோனா சிகிச்சைக்கான மத்திய நிலையத்தை மக்கள் செறிந்து வாழும் எப் பிரதேசத்திலும் அமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது எனவும் புனானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகமான பட்டிகலோ கேம்பஸ் கட்டிடத்தை கெரோனா சிகிச்சைக்கான மத்திய நிலையமாக அமைப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தமது கண்டனத்தை வெளியிட்டார்.
நேற்று (10) இரவு தனது மாவடிப்பள்ளி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர் தொடர்ந்தும் அங்கு பேசுகையில்..
உலகை உலுக்கிவரும் கொரோனா தொற்றுக்கு ஆளான இலங்கையர்களை ஓரிடத்தில் ஒன்றிணைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிகிறோம். அவ்வாறு கொரோனா தொற்றுக்கு ஆளான இலங்கையர்களை தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பிரதேசமான புனாணையில் அமைந்துள்ள முன்னாள் ஆளுநர் சகோதரர் எம்.எல்.எம்.ஏ . ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு சொந்தமான பட்டிகலோ கேம்பஸ் கட்டிடத்தை ஆக்கிரமித்து அதனை தங்குமிடமாக மாற்ற நடவடிக்கை எடுப்பதை சிறுபான்மை கட்சியொன்றின் பிரதித்தலைவராகவும், மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஒருவனாகவும் பகிரங்கமாக எதிர்க்கிறேன்.
இந்த வேலைத்திட்டமானது நாட்டில் பெரும்பான்மை சமூகம் வாழும் பிரதேசங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அந்த மக்களின் எதிர்ப்பினால் இப்போது எங்களின் கிழக்கு மண்ணை நோக்கி நகர்ந்துள்ளது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையிலும் தமிழ் மக்களின் எதிர்ப்பு அதிகரிக்கவே இவர்கள் இப்படியான முடிவை எடுத்துள்ளார்கள்.
பட்டிகலோ கேம்பஸ் பல்கலைக்கழகமானது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் முன்னாள் ஆளுநர் சகோதரர் எம்.எல்.எம்.ஏ . ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் அதை இவ்வாறு கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையமாக மாற்ற முயற்சிப்பதானது மிகவும் கவலையான விடையமாகும். எமது நாட்டில் கைவிடப்பட்ட பல்வேறு கட்டடத் தொகுதிகள் இருக்கின்ற நிலையில் இந்த பல்கலைக் கழகத்தை அரசு தெரிவு செய்துள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது. இது சிறுபான்மை மக்களின் மீது அரசு தன்னுடைய இரும்புக்கரத்தை வைப்பதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
தனியார் முதலீடுகளை இப்படி அனுமதி பெறாது இராணுவ உதவியுடன் கையகப்படுத்துவது இலங்கையில் தமது முதலீடுகளை முதலிடும் சர்வதேச முதலீட்டார்களை அச்சத்திற்க்குள் கொண்டுசென்று நாட்டின் சர்வதேச முதலீடுகளை பாதிக்கும் செயலாகும் என தெரிவித்தார்.
Post a Comment