கட்சிக்குள் பிளவு ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு சஜித் பிரேமதாசவுடன் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்பேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
அந்தவகையில் சஜித் பிரேமதாசவுடன் தொடர்ந்து கலந்துரையாடத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள், ‘யானை’ சின்னமே தேர்தலுக்கான கட்சியின் அடையாளமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடக்கூடாது, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதற்கிடையில், மத்திய வங்கி பத்திர மோசடி தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் ரவி கருணநாயக்கை கைது செய்வதற்கான முயற்சிகள் குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக இந்த கைது நடவடிக்கை நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் ஒரு செயற்பாடு என்றும் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
Post a Comment