Top News

பள்ளிவாசல்களை தற்காலிகமாக மூடலாமா?


அஷ்ஷைக் பளீல்

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தற்காலிகமாக பள்ளிவாயல்களை முடலாமா என்ற கேள்வி தற்போது பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.

நோய் தொற்று இருப்பவர்கள் குறிப்பாகவும் இருமல் தடிமல் போன்றன கண்டவர்கள் பொதுவாகவும் பள்ளிக்கு வராமல் வீட்டில் தொழுது கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். பள்ளிக்கு வருபவர்களும் நீண்ட நேரம் பள்ளியில் தரித்திருக்கலாகாது வீடுகளில் வுளு செய்துவிட்டு வரவேண்டும். கை குலுக்குவதைத் தவிர்க்க வேண்டும் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

இன்னும் சிலரோ நிலைமை மிக மோசமாக இருப்பதால் மறு அறிவித்தல் வரை பள்ளிவாயல்கள் முழுமையாக மூடப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இது இப்படி இருக்க சில அரபு மற்றும் மேற்கத்திய நாடுகளிலும் பள்ளிவாயல்கள் முழுமையாக மூடப்பட்டிருக்கின்றன. உதாரணமாக குவைத் அவ்காப் அமைச்சும் பத்வா கமிட்டியும் இணைந்து இது பற்றிய பத்வாவை(18/20) வெளியிடப்பட்டுள்ளன.

குவைத் நாட்டில் முஅத்தின்கள் மட்டும் பள்ளிவாயலுக்கு வந்து அதான் சொல்ல வேண்டும் என்றும் தொழுகைக்கு வாருங்கள் என்ற வாசகத்தை தவிர்த்து உங்களது வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று கூற வேண்டும் என்றும் பணிப்புரை விடுக்கப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூரின் மஜ்லிஸ் உலமா இஸ்லாம் சிங்கப்பூர் எனும் அமைப்பு MEDIA STATEMENT ON TEMPORARY CLOSURE OF MOSQUES AND SUSPENSION OF MOSQUE ACTIVITIES எனும் தலைப்பில்

மார்ச் 12ஆம் தேதி வெளியிட்ட ஓர் அறிக்கையில் 13-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிவாசல்களும் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைக்காக அடுத்த 5 நாட்களுக்கு மூடப்பட வேண்டும், என்றும் பள்ளிவாயில்களை மையமாகக்கொண்டு இடம்பெறும் விரிவுரைகள், மார்க்க வகுப்புகள், சிறார்களுக்கான அமர்வுகள் மார்ச் 13ஆம் தேதி முதல் 27ம் நிறுத்தப்படல் வேண்டும் என்றும் தீர்மானித்திருக்கிறது. இந்த அமைப்பு முஸ்லிம் சமூகம் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் முஸ்லிம் சமூகத்தின் பொது சுகாதாரத்திற்கும் சிங்கப்பூர் வாழ் அனைத்து சமூகங்களது நலன்களுக்கும் இது நல்லதாக அமையும் என்றும் தெரிவித்திருக்கிறது. கடற்கரை ஓரத்தில் உள்ள பாத்திமா பள்ளி வாசல் மூடப்பட்டிருப்பதுடன் 'பள்ளிவாயல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும்' என்ற அறிவித்தல் பலகையின் புகைப்படமும் வெப் தளம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இது இப்படியிருக்க இதற்கான அனுமதி மார்க்கத்தில் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது?

வரலாற்றை எடுத்து நோக்கும் போது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சிலர் பள்ளிவாயலுக்கு வராமல் இருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இமாம் ஷவ்கானி அவர்கள் 'நைலுல் அவ்தார்' எனும் கிரந்தத்தில் பின்வரும் ஹதீஸ்களை அதற்காக முன்வைக்கிறார்கள்.'ஜமாஅத் தொழுகையை விடுவதற்கு நியாயங்கள்'என்ற தலைப்பில் அந்த ஹதீஸ்கள் இடம் பெற்றிருக்கின்றன.

பிரயாணத்தில் இருக்கும் போதும் மழை அதிகமாகப் பெய்யும் இரவிலும் கடும் குளிரான இரவிலும் "உங்களது பிரயாணக் கூட்டங்கள் தங்கி இருக்கும் இடத்திலேயே தொழுது கொள்ளுங்கள்" என்று தொழுகைக்காக அழைப்பு விடுப்பவர் கூறவேண்டும் என்று நபி(ஸல்) கட்டளையிட்டார்கள்.

மற்றொரு ஹதீஸில் அதிகமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள் தங்களது முஅத்தினை நோக்கி 'தொழுகைக்கு விரைந்து வாருங்கள் என்று கூற வேண்டாம். உங்களது வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று கூறுங்கள் ' என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களது இந்த நிலைப்பாட்டை மக்கள் சற்று வித்தியாசமாகப் பார்த்த பொழுது 'நீங்கள் இதற்காக ஆச்சரியப்படுகிறீர்களா? என்னை விடவும் சிறந்த ஒருவர் - அதாவது முஹம்மத் (ஸல்)அவர்கள் இவ்வாறு செய்திருக்கிறார்கள்' என்று கூறியதுடன், 'ஜும்ஆ என்பது கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்றாகும். உங்களை வீடுகளிலிருந்து வெளியேற்றி நீங்கள் சேற்றிலும் சகதியிலும் நடந்து போவதை நான் விரும்பவில்லை' என்றும் அவர்கள் கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் வந்த ஓர் அறிவிப்பின்படி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மழை பெய்து கொண்டிருந்த ஜும்ஆ நாளிலே தனது முஅத்தினுக்கு இவ்வாறு சொன்னதாக பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.




இதுதவிர பள்ளிக்குப் போவதனால் பிறருக்கு தொந்தரவு ஏற்படுமாயின் அல்லது பிறரிடமிருந்து ஏதாவது தொற்று ஏற்படும் என்ற கட்டத்தில் அவ்வாறு அங்கு போகாமல் இருக்க முடியும் என்ற கருத்து ஏற்கனவே அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் காட்டுகின்ற ஆதாரங்கள் வருமாறு:-

1. "உங்களையே நீங்கள் அழிவுக்குள் தள்ளிக் கொள்ள வேண்டாம். நற்பணிகளில் ஈடுபடுங்கள்.நற் பணியாளர்களை அல்லாஹ் விரும்புகின்றான்" என்ற அல்குர்ஆனின் வசனத்தின்படி அதாவது ஒரு அம்சத்திற்குள் எமது அழிவுக்கான காரணி இருக்குமாக இருந்தால் அதனை நாம் சம்பந்தப்படுத்திக் கொள்வதை அது தடை செய்கிறது. மட்டுமன்றி பிறருக்கு பிறருக்கு நலவை உண்டுபண்ணும் காரியங்களில் ஈடுபடும்படியும் இந்த வசனம் சொல்லுகிறது.




2.لا ضرر ولا ضرار

எனப்படும் பிரபலமான ஹதீஸில் நாம் அழிவுக்கு உட்படவோ பிறரை அழிவுக்கு உட்படுத்தவோ கூடாது என்று கூறப்படுகிறது.




3. நபி (ஸல்)அவர்கள் 'பூண்டு சாப்பிட்டவர்கள் எமது பள்ளிவாயலை நெருங்கவும் வேண்டாம்' என்று கூறியிருக்கிறார்கள்.




மேற்கூறப்பட்ட மூன்று ஆதாரங்களையும் வைத்து 'முஸ்லிம்களது அறிஞர்களது சர்வதேச ஒன்றியம்'(IUMS)வெளியிட்டுள்ள பத்வாவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-




மேற்கூறப்பட்ட ஆதாரங்களையும் வேறு ஆதாரங்களையும் வைத்துப் பார்க்கின்ற பொழுது உடல் நலனுக்கு ஆபத்துக்கள் உருவாகலாம் என்ற சாத்தியப்பாடு இருக்கும் சூழலில் ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவது ஷரீயாக ரீதியாக கடமையானது அல்ல, அவ்வாறு நிறைவேற்றவும் கூடாது. துர்நாற்றத்தை கொண்டிருக்கின்ற ஒருவரால் ஏனைய தொழுகையாளிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் பட்சத்தில் பள்ளிக்குள் வரக்கூடாது என்று கடைசியாக கூறப்பட்ட ஹதீஸில் குறிப்பிடப்பட்டிருப்பதாயின் பிறருக்கு நோயும் மரணமும் ஏற்படும் வகையில் ஒருவர் நடந்து கொண்டால் அல்லது தனக்கே அவற்றை எடுத்துக் கொள்ளும் நிலை காணப்பட்டால் அப்படியான ஒருவர் எப்படி பள்ளிவாயலுக்கு வர முடியும்? ஒருவர் தொழுகையில் ஈடுபடும் பொழுது அவருக்கு வலமாகவும் இடமாகவும் நின்று கொண்டிருக்கும் ஒருவர் தும்மக் கூடும். அல்லது இருமக் கூடும். முகங்கள் நேருக்கு நேர் இருப்பதற்கும் மூச்சுக்கள் பரஸ்பரம் உள்நுழைவதற்குமான நிலை இருப்பதால் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்' என்று அந்த பத்வாவுக்கு நியாயம் கூறப்படுகிறது.




அந்த பத்வாவின் இறுதிப் பகுதி பின்வருமாறு கூறுகிறது:-




'எந்த ஊரில் தொற்று நோய் பரவ ஆரம்பித்து அரசின் நம்பத்தகுந்த உறுதியான வைத்திய அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது உண்மையிலேயே அச்சத்துக்கு உரிய பிரதேசமாக அது மாறி இருந்தால் அது எந்த ஊராக இருப்பினும் அங்கு ஜும்ஆ மற்றும் ஜமாஅத் தொழுகைகளை நிலை நிறுத்தலாகாது என IUMS அனைத்து முஸ்லிம்களையும் வேண்டிக்கொள்கிறது. தொற்றுநோய் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்து ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக உரிய தரப்பினர் அறிவிக்கும் வரை இந்த நிலை தொடரும்" என்றும் அந்த ஃபத்வாவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.




எனவே நாம் எமது நாட்டைப் பொறுத்த வரையிலும் தொழுகையாளிகளை முதலிலும் அடுத்ததாக நாட்டில் உள்ள அனைவரையும் பாதுகாக்கும் நோக்கிலும், முஸ்லிம் சமூகம் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் வகையிலும் நல்ல முடிவுக்கு வருவது தான் பொருத்தமானதாக இருக்கும்.




எம்மாலான தற்காப்பு முயற்சிகளில் ஈடுபட்டு விட்டு அல்லாஹ்வில் தவக்குல் வைப்போம். துஆக்களிலும் நல்அமல்களிலும் ஈடுபடுவோம். ஆனால், அவனது முடிவு தான் முடிந்த முடிவாக வரும்.அதனை எவராலும் தவிர்க்க முடியாது.அவன் எந்த முடிவை எடுத்தாலும் அதற்காக அவன் புறத்தில் நியாயங்கள் இருக்கும்.அதற்காக நாம் முயற்சிகளில் ஈடுபடாதிருக்க முடியாது. முயற்சிப்பது எமது கடமை.தீர்மானம் அவனது உரிமை.




அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக!

Post a Comment

Previous Post Next Post