Top News

உலகமே கொரோனா பீதியிலிருக்கும் நிலையில் ஏவுகணை சோதனையில் வடகொரியா!





ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வந்தது.
இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்தன. இவ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங்கும் இரண்டு தடவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அணு ஆயுத தயாரிப்பதை முழுமையாக கைவிடுமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை வடகொரியா ஏற்கவில்லை.

இதனால், வட கொரியா மீதான கடுமையான பொருளாதாரத் தடையை விலக்கி கொள்ள அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மறுத்துவிட்டார். இதனால் இருநாட்டுத் தலைவர்களிடையே நடந்த 2 பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இதனையடுத்து வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது.

தற்போது உலகமே கொரோனா வைரசால் கடும் அச்சத்தில் இருக்கும் சூழலில் வடகொரியா கடந்த சில தினங்களுக்கு முன் குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஏவி சோதித்தது. இது கொரோனாவால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் வடகொரியா , சிறிய ரக ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. வடகொரியாவின் வடக்கு பியாங் மாகாணத்தின் கிழக்கு கடல் பகுதியில் இரண்டு சிறிய ரக ஏவுகணையை வடகொரியா பரிசோதித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post